தொடரி – விமர்சனம்

ரயிலில் கேண்டீன் சப்ளையராக வேலைபார்ப்பவர் தனுஷ். அனாதையான அவருக்கு அந்த ரயிலில் பயணிக்கும் நடிகை ஒருவருக்கு டச்சப் பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ் மீது லவ்வாகிறது. கீர்த்திக்கு பாடுவதில் ஆர்வம் என தெரிந்துகொண்டு, தனக்கும் வைரமுத்துவுக்கும் நெருங்கிய பழக்கம் என பொய்யாக கூறி, அவருடன் காதலை வளர்க்க முயற்சிக்கிறார் தனுஷ்.

அதேநேரம் இரயிலில் பயணிக்கும் மந்திரி ராதாரவிக்கு பாதுகாவலராக வரும் கமாண்டோ ஹரீஷ் உத்தமனுக்கும் தனுஷுக்கும் உரசல் ஏற்படுகிறது.. இன்னொரு பக்கம் ரயில் ட்ரைவர்களான ஆர்.வி.உதயகுமாருக்கும், குடித்துவிட்டு பணிக்குவந்த போஸ் வெங்கட்டுக்கும் பயணத்தின்போது சர்ச்சை ஏற்பட, எதிர்பாராதவிதமாக பூட்டிய இஞ்சின் கேபினில் உதயகுமார் மரணத்தை தழுவுகிறார்.. ரயில் 130 கி.மீ வேகத்தில் எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் பறக்கிறது.

சரியாக அந்த நேரத்திற்கு முன்புதான் கொள்ளையர்கள் ரயிலில் புகுந்து கொள்ளையடித்து விட்டு தப்பிக்க நினைக்கின்றனர்.. ரயிலில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டதாக தகவல் பரவ, இந்த களேபரத்தில் கமாண்டோ ஹரீஷ் உத்தமனின் துப்பாக்கி காணாமல் போக, அதற்கு காரணமான தனுஷையும், கீர்த்தி சுரேஷையும் தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களை சுட்டுத்தள்ள முயற்சிக்கிறார் ஹரீஷ் உத்தமன்..

இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராமன், ரயில்வே அதிகாரிகளுடன் சேர்ந்து ரயிலை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார். இறுதியில் ரயில் பெட்டிகளை இஞ்சினில் இருந்து கழட்டிவிட்டால் தப்பிக்கலாம் என்கிற நிலையில் தனுஷின் உதவியை நாடுகிறார்கள்.. இன்ஜினின் அந்தப்பக்கம் கீர்த்தி, இந்தப்பக்கம் தனுஷ்… முடிவு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்…

டில்லியில் இருந்து சென்னை வரையிலான பிரேக் பிடிக்காத ரயில் பயணத்தில் நடக்கும் திக்திக் சம்பவங்கள் தான் மொத்தப்படமும்.. அதை இயக்குனர் பிரபு சாலமன் காதல் கலந்து தனது ஸ்டைலில் படமாக்கியுள்ளார்.

ஹீரோயிசம் இல்லாத இப்படிப்பட்ட கதையில் தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டதே ஆச்சர்யம்.. பிரபு சாலமனின் கதையில் இதுநாள் வரை புதுமுகங்கள் காதலால் உருகுவதை பார்த்து பார்த்து பழகிவிட்ட நமக்கு தனுஷ், கீர்த்தி சுரேஷின் பின்னால் காதலாக சுற்றுவதை பார்க்க மனம் ஒப்பவில்லை.. இத்தனைக்கும் இருவரும் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள்.. அதெல்லாம் பாராட்டுக்கு உரியதே..

ஆனால் காமெடி, காதல் என்கிற பெயரில் முக்கால் மணி நேரம் மெதுவாக நகரும் படம் தான் நம்மை சோதிக்கிறது. இடைவேளைக்குப்பின் பிரேக் பிடிக்காத ரயிலை நிறுத்துவார்களா இல்லையா, கீர்த்தியை தீவிரவாதி என நினைத்து போலீஸார் சுட்டுக்கொன்று விடுவார்களா என்கிற பதைபதைப்பில் இருக்கும்போது, ரொமான்ஸ் பாட்டு எதற்கு சார்..?

இதுபோன்ற கதைகளில் பிரேக் பிடிக்காத ரயில் கடக்கும் தூரமும் நேரமும் அதிகம் இருக்கவேண்டும்.. ஆனால் இங்கே அந்த லாஜிக்கை எல்லாம் வசதியாக ஒதுக்கி வைத்துவிட்டார் பிரபுசாலமன்.. ஆனால் ஒன்று பலவீனமான பாலத்தை ரயில் கடக்கும்போதும், சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து சேரும் நேரத்திலும் தனுஷ் ஏதாவது ஹீரோயிஷம் பண்ணி ரயிலை நிறுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் அந்த இடத்தில் யதார்த்தம் மீறாமலேயே கதையை நகர்த்தியிருக்கும் இயக்குர் பிரபு சாலமனை பாரட்டலாம்.

வழக்கமாக பிரபுசாலமனின் வலது கையாக படத்தின் இன்னொரு முக்கிய தூணாக இருப்பவர் தம்பி ராமையா தான். ஆனால் இந்தப்பத்தில் அந்த மேஜிக் நடக்கவில்லை.. ராதாரவி எப்போதும்போல தனது சட்டையர் நடிப்பால் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். அதிலும் காமண்டர் ஹரீஷ் உத்தமனின் துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்டு அவருக்கு டோஸ் விடுவது சூப்பர். ஹரீஸ் உத்தமனும் சரியான வில்லத்தனம் காட்டியுள்ளார்.

கருணாகரனின் வைரமுத்து காமெடி ஒரே ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறது. படவா கோபி, சன்.டிவி.ராஜா, கு.ஞானசம்பந்தம் என ஒரு டீமை வைத்து விவாத மேடை என்கிற பெயரில் சேனல்களின் டி.ஆர்.பி அட்ராசிடிகளை புட்டுப்புட்டு வைக்கிறார்.. இந்தப்படத்தில் மீடியாக்கள் பண்ணுவது ஓவரா..? இல்லை மீடியாக்கள் ஓவராக பண்ணுவதாக சித்தரித்திருக்கிரார்களா என்பதை படம் பார்க்கும் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

படத்தின் முக்கிய தூண் என்றால் அது கேமராமேன் மகேந்திரன் தான்.. ரயில் காட்சிகளையும் அது சார்ந்த வெளிப்புற காட்சிகளையும் படமாக்கிய விதம் அருமை. இமானின் இசைக்கும் பெரிய வேலையில்லை.. மைனா, கும்கி ஆகிய படங்களை கிரிப்பாக எடிட் பண்ணியிருந்த எடிட்டர் எல்.வி.கே.தாசனின் கத்திரிக்கும் பெரிய வேலையில்லை.

மொத்தத்தில் தொடரி – மிகப்பெரிய ‘இழுவை’ ரயில்..!

Rating:2.5/5