தொட்ரா – விமர்சனம்


வசதியான வீட்டுப்பெண்ணும் வசதியற்ற பையனும் காதலித்தால்..? காதலை வைத்து கட்டப்பஞ்சாயத்து பண்ணும் கயவர்களின் கைகளில் இவர்கள் காதல் சிக்கினால்..? என்ன ஆகும் என பாடம் எடுக்கிறது இந்த ‘தொட்ரா’ படம்.

காலையில் பேப்பர் போட்டுவிட்டு கல்லூரிக்கும் போய் படித்துவரும் ஏழைப்பையன் பிருத்வி. ஜாதிப்பெருமை பேசும் வசதியான எம்.எஸ்.குமாரின் தங்கையான வீணாவை காதலிக்கிறார். காதலுக்கு அண்ணனும் அப்பாவும் எதிர்ப்பு தெரிவிக்க, அதை புறந்தள்ளி, பிருத்வியுடன் ஊரைவிட்டு ஓடி திருமணம் செய்துகொள்கிறார் வீணா. அந்த அதிர்ச்சியில் வீணாவின் தந்தை மரணிக்க, தங்கையை தேடிப்பிடித்து வீட்டுக்கு இழுத்து வருகிறார் அண்ணன்.

வீணாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் பிருத்வி, காதலை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஏ.வெங்கடேஷிடம் உதவி கேட்கிறார்.. நீதி மன்றம் மூலம் வழக்கு தொடுத்து வீணாவை பிருத்வியுடன் இணைத்து வைக்கும் வெங்கடேஷ், அதன் பின்னர் காதலர்களிடம் தனது கோர முகத்தை காட்டுகிறார்.. காதலர்களின் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

ஜாதிவிட்டு ஜாதி காதலிப்பது, ஏழை-பணக்காரன் காதல், என பல படங்களில் பார்த்த கதை தான் என்றாலும் அதில் காதல் கட்டப்பஞ்சாயத்து என ஒரு புதிய ஐட்டத்தை சேர்த்து ‘அட’ இப்படி ஒன்னு இருக்கா என ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். பிருத்வியை பார்க்கும் போதெல்லாம் காதல் பரத் ஞாபகத்துக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.. அமெச்சூர்த்தனமாக காதலிப்பவர்கள் செய்யும் அத்தனை முட்டாள்தனங்களையும் பிருத்வியும் செய்கிறார். அதுதான் கேரக்டருக்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது…

நாயகி வீணா, இந்த கதைக்கு தோதான நபர் தான். இடைவேளைக்குப்பின் நடிப்பில் ஸ்கோர் பண்ண முயற்சித்திருக்கிறார். வீணாவின் அண்ணனாக வரும் புதுமுகம் எம்.எஸ்.குமார் அலட்டல் இல்லாத நடிப்பால் கவனிக்க வைக்கிறார். இனி இவரைத்தேடி வாய்ப்புகள் வரும் என தாராளமாக சொல்லலாம். கட்டப்பஞ்சாயத்து பண்ணும் ஏ.வெங்கடேஷின் குள்ளநரித்தனம் ரசிக்க வைக்கின்றன. அவருக்கு உதவியாளராக வரும் கூல் சுரேஷ் சீரியாஸாக செல்லும் படத்தை அவ்வப்போது கூல் பண்ணுகிறார். மைனா சூசன் இதிலும் தனது வில்லத்தனத்தை தொடர்ந்துள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர் என்றாலும் உத்தமராசா ஓரளவு கவனிக்க வைக்கிறார். காதலிப்பவர்கள் பெற்றோரிடம் கூட சரணடைந்து விடுங்கள், ஆனால் இப்படிப்பட்ட காதல் கட்டப்பஞ்சாயத்து பண்ணும் மிருகங்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என ஒரு புதிய செய்தியை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மதுராஜ். அந்த விழிப்புணர்வு மெசேஜுக்காகவே இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.. படத்தையும் ஒருமுறை பார்க்கலாம்..