தும்பா – விமர்சனம்


பெயிண்டர் தீனாவுக்கு பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் பெயிண்ட் காண்ட்ராக்ட் ஒன்று கிடைக்கிறது. உதவியாளர்கள் கிடைக்காத நிலையில் நண்பன் தர்ஷனை அழைத்துக்கொண்டு டாப்ஸ்லிப் செய்கிறார் அதேபோல வைல்ட் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியனும் காட்டு மிருகங்களை படமெடுக்க டாப்ஸ்லிப் வருகிறார்.

இந்த சமயத்தில் கேரளாவில் இருந்து தும்பா என்கிற ஒரு புலி தப்பி டாப்ஸ்லிப்புக்குள் நுழைந்துவிடுகிறது. இந்த புலியையே புகைப்படம் பிடிக்க ஆசைப்படும் கீர்த்தி பாண்டியன் தீனா-தர்ஷன் உதவியை நாடுகிறார். இன்னொரு பக்கம் இந்த புலியை பிடித்து விற்பதற்கான சதி வேலையில் ஈடுபடுகிறார் காட்டிலாகா அதிகாரி. அவரது சதிக்கு இடைஞ்சலாக இந்த மூவரின் புகைப்பட பயணம் அமைகிறது. புகைப்படம் எடுபதுடன் புலியையும் காப்பாற்ற முடிவெடுக்கிறார் கீர்த்தி பாண்டியன்.

இதனால் நடக்கும் களேபரங்கள் தான் மீதிக்கதை.. கீர்த்தி பாண்டியன் தான் நினைத்தபடி புகைப்படம் எடுத்தாரா..? காட்டிலாகா அதிகாரியின் சதி நிறைவேறியதா..? புலிக்கு என்ன ஆனது என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

படம் முழுக்க காடும் காடு சார்ந்த இடமும் என காட்சிகள் அனைத்தும் பார்ப்பதற்கு ரம்மியமாக ஒரு காட்டுக்குள் சுற்றுலா சென்று வந்த உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவாளர் நரேன் இளன் அந்த விதமாக சபாஷ் பெறுகிறார். அதேசமயம் கதையிலும் திரைக்கதையிலும் அழுத்தம் தர தவறி இருப்பதால் ஏதோ அலுப்புடன் சுற்றுலா சென்ற உணர்வே ஏற்படுகிறது.

படத்தில் கதாயகன் தீனாவா தர்ஷனா என்கிற குழப்பம் படத்தின் இறுதிவரை நீடிக்கிறது.. சரி இரண்டு கதாநாயகர்கள் என்று வைத்துக் கொண்டாலும் தர்ஷன் ஒப்புக்குச் சப்பாணியாக வந்து போரடிக்கிறார்.. ரியாலிட்டி ஷோக்களில் எடுபட்ட தீனாவின் காமெடி இதில் அவருக்கு கை கொடுக்க மறுத்து இருக்கிறது. இருந்தாலும் ஓரளவுக்கு ஒப்பேற்றியிருக்கிறார். நாயகி கீர்த்தி பாண்டியன் அந்த கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமானவராக இருக்கிறார்.. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு எதிர்காலம் உண்டு..

இவர்கள் தவிர ஃபாரஸ்ட் ரேஞ்சர், அவரது கையாட்கள் என ஒரு பட்டாளம் வந்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.. யானை புலி உள்ளிட்ட மிருகங்களுக்கு கிராபிக்ஸ் வடிவம் கொடுத்திருக்கிறார்கள் அதில் புலி நம்மை நன்றாகவே கவர்கிறது. இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் உதவி செய்தவர்களை புலி ஒன்றும் செய்யாது என சிறுவர் மலர் கதையை கூறி காதில் பூ சுற்றி இருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் ராம்.. அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என் ஒன்றுக்கு மொன்று இசையமிப்பலர்குள் இருந்தும் பெரிய ளவில் படத்துக்கு உதவவில்லை.

இந்த படத்தில் புலியை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை செல்வதற்காகவே கெஸ்ட் ரோலில் வந்துசெல்லும் ஜெயம் ரவிக்கு ஒரு சல்யூட். மற்றபடி எந்நேரமும் கதாநாயகியிடம் எங்களை விட்டுவிடு நாங்கள் ஊருக்கு போகிறோம் என புலம்பும் தர்ஷன் தீனாவின் புலம்பலை பொறுத்துக் கொள்ள நினைப்பவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளையும் படத்திற்கு அழைத்துச் செல்லலாம்.