சுனைனா, ஜெனிபர், கல்லூரி வினோத் உள்ளிட்ட நண்பர்கள் குழு ஜாலி ட்ரிப் செல்கின்றனர். எதிர்பாராத விதமாக ஒரு காட்டுப்பகுதிக்குள் அவர்கள் நுழைகின்றனர். அந்த காட்டுக்குள் இருக்கும் வீட்டை புதுப்பிக்கும் பணிக்காக வரும் யோகிபாபு மற்றும் கருணாகரன் இருவரையும் சந்தர்ப்பவசத்தால் கொலைகாரர்களாக நினைக்கிறார்கள். அதற்கேற்றவாறு சுனைனாவும் யோகிபாபு, கருணாகரன் இருவரிடமும் அந்த வீட்டில் சிக்கிக்கொள்கிறார்.
அவரை மீட்கவேண்டும் என்பதற்காக நண்பர்கள் குழு முயற்சிக்கும்போது அந்தக்காட்டில் இருக்கும் நிஜமான கொலைகாரர்கள் சிலரால் நண்பர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். அந்த காட்டில் நுழையும் மனிதர்களை சம்பந்தமே இல்லாமல் அவர்கள் கொல்லவேண்டிய காரணம் என்ன, அவர்களை இந்த யோகிபாபு உள்ளிட்ட குழுவினரால் அழிக்க முடிந்ததா, அட்லீஸ்ட் அவர்களிடம் இருந்து அவர்களால் தப்பிக்கவாவது முடிந்ததா என்பது மீதிக்கதை.
பல ஹாரர் படங்களில் காட்டுக்குள் இருக்கும் மர்ம பங்களாவுக்கு இதேபோலத்தான் நண்பர்கள் குழுவாக வருவார்கள்.. அவர்களை பேயோ அல்லது மனித வில்லனோ வரிசையாக கொல்வார்கள். அதற்காக ஒரு பிளாஸ்பேக்குடன் கூடிய காரணம் அவர்களிடம் இருக்கும். ஆனால் இதில் அந்த கொலைகாரர்கள் ஏன் மனிதர்களை கொல்கிறார்கள் என்பதற்கான காரணம் புதுசு. இன்னும் சொல்லப்போனால் இப்படிஎல்லாம கூடவா நடக்கும் என்கிற திகைப்பை ஏற்படுத்துகிறது இந்த ட்ரிப்.
யோகிபாபு, கருணாகரனை பொறுத்தவரை ஒரு படத்தில் காமெடியனாக ஹீரோவுடன் வந்து சென்றால் அது அழகாக ஒர்க் அவுட் ஆகிறது. அதுவே அவர் முழுநீள கதாநாயகனாக நடிக்கும்போது பல காமெடி காட்சிகள் நெல்லுடன் கலந்திருக்கும் பதரைப்போல ஒன்றுக்கும் உதவாமல் போகின்றன. இந்தப்படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனாலும் ஓரளவுக்காவது நெல்லும் கிடைக்கிறதே என சந்தோஷப்பட்டு கொள்ளவும் நிறைய இடங்கள் இருக்கின்றன..
நாயகி சுனைனா படம் முழுதும் கருப்பு பனியன் அணிந்தபடியே ரசிகர்களுக்கு கவர்ச்சி கிளகிளுப்பூட்டுகிறார். அவ்வபோது கொஞ்சம் வீர சாகசமும் செய்கிறார். அவருடன் வரும் நண்பர்கள் குழுவுக்கு முட்டாள்தனமாக யோசிப்பதற்கும் அலறுவதற்கும் தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. கொடுத்த வேலையை செய்துள்ளார்கள். மொட்ட ராஜேந்திரனிடம் ஒருநாள் கால்ஷீட் வாங்கினாலும் அவரை வைத்து கலகலப்பை உருவாக்கி இருக்கலாம். அதுவும் இதில் மிஸ்ஸிங்.
படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கியுள்ளார். காடு, அதற்குள் வீடு, படம் முழுதும் வரும் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் ஒரே காஸ்ட்யூம் என சிக்கனமாக, அதே சமயம் திரில்லராக, அதேசமயம் காமெடியாக என படத்தை எடுத்துள்ளார். சிலசமயம் அடடே பரவாயில்லையே என நினைக்க தோன்றுகிறது.. சிலசமயம் எப்படா படம் முடியும் கிளம்புவோம் என்கிற எண்ணமும் ஏற்படுகிறது.
இந்தப்படம் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் பட்ஜெட்டில் போய் வந்த பேமிலி ட்ரிப் மாதிரி பாதி சந்தோஷம் பாதி சங்கடம்