உடன்பிறப்பே – விமர்சனம்

‘கத்துக்குட்டி’ படத்திற்கு பிறகு இரா.சரவணன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் தான் இந்த உடன்பிறப்பே.பாசமலர்.. தொடங்கி கிழக்குச் சீமையிலே… நம்ம வீட்டு பிள்ளை ’வரை நாம் பார்த்த அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட்தான் படம்.

அண்ணன் சசிகுமார் & தங்கை ஜோதிகா. தங்கை கணவர் சமுத்திரக்கனி. சசிகுமார் ஒரு அடாவடி பேர்வழி. அதுவே ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தின் பிரிவுக்கும் காரணமாகிறது. எனவே 15 ஆண்டுகளாக பாசப் போராட்டம் நடத்துகிறார் ஜோதிகா. 15 வருடங்கள் அப்படி என்னதான் பிரச்சினை? மீண்டும் இந்த பாசமலர்கள் இணைந்தார்களா? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக்கதை…

சசிகுமார் எப்பவும் போல தனக்கே உரித்தான வேஷ்டி சட்டை முறுக்குமீசை என தோற்றத்திலும் நடிப்பிலும் கம்பீரமாக வருகிறார். தன்னுடைய 50வது படத்தை தனக்கு ஏற்ற மாதிரி தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜோதிகா.நேர்மையான மனிதராக சமுத்திரக்கனி. தனது அட்வைஸ் கேரக்டரை அட்வைஸ் செய்யாத அளவுக்கு செய்திருக்கிறார்.

இந்த குடும்ப பாச பயணத்தில் காமெடி ட்ராக் போட்டு அசத்தி இருக்கிறார் சூரி. வித்தியாசமான அதே சமயம் கவனம் ஈர்க்கும் கேரக்டரில் கலையரசன். ஆடுகளம் நரேன், தீபா, வேல்ராஜ் என அனைவரும் தங்கள் கேரக்டரில் நேர்த்தி.

சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கிறார். அமைதியான அழகான அன்பான மனைவி.. என மிகையில்லாத நடிப்பில் அளவாக நடித்திருக்கிறார் சிஜா. காவல்துறை ஆய்வாளராக வேல்ராஜ், சசிகுமார் மகனாக சித்தார்த், ஜோதிகாவின் மகள் நிவேதிதா சதீஷ் என அனைவரும் கச்சிதம்.

இமானின் இசை படத்திற்கு பலம்.. பாடல்கள் அனைத்தையும் கேட்கும் ரகத்தில் இருக்கிறது.வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்களும் காட்சிகளும் கண்களுக்கும் மனதுக்கும் இதமளிக்கிறது. ரூபனின் எடிட்டிங்கில் காட்சிகள் ஷார்ப்..

உடன்பிறப்புகளின் பாசப் போராட்டம், ஆழ்துளை கிணறு, கடன் தவணை கட்ட முடியாத விவசாயி வாழ்க்கை போராட்டம், மார்வாடிக்கு வட்டி பாடம் ஆகிய சமூக அக்கறைகளை இந்த சென்டிமெண்ட் சுவையில் கலந்துள்ளார் இயக்குநர்.

பாசமான கதையை பக்காவாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன்.