பேய்க்கதை சீசனிலிருந்து சற்று விலகி சைக்காலஜிகல் த்ரில்லராக வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘உரு’..
பிரபல எழுத்தாளர் கலையரசன்.. ஒரு காலத்தில் ஓகோவென விற்பனையான அவரது நாவல்கள் இப்போது டல்லடிக்க ஆரம்பிக்கிறது. ட்ரென்ட் மாறிவருவதை உணர்ந்துகொண்ட கலையரசன் பேய்க்கதை எழுத முடிவு செய்கிறார்.. இதற்காக தனிமையை நாடி மேகமலையில் உள்ள ஒரு பங்களாவுக்கு செல்கிறார்..
சில நாட்களில் அவரை தேடி அவரது மனைவி தன்ஷிகாவும் வருகிறார். இந்த நிலையில் கலையரசன் எழுதும் கதையில் இடம்பெறும் சம்பவங்கள் உண்மையாகவே நடக்கின்றன.. கதைப்படி தொடர் கொலைகளை செய்யும் சீரியல் கில்லர் கலையர்சனையும் தன்ஷிகாவையுமே கொல்வதற்காக தேடி வருகிறான்…
அதெப்படி கதையில் எழுதுவது நிஜத்தில் நடக்கிறது..? யார் அந்த கொலைகாரன்..? ஏன் அவன் கலையரசன்-தன்ஷிகாவை துரத்த வேண்டும்…? அவனிடமிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பது தான் மீதிக்கதை..
இது ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் என்றாலும் கூட கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா..? ஆனால் படமாக பார்க்கும்போது அந்த சுவாரஸ்யத்தை குறையாமல் தந்திருக்கிறார்களா என்றால்…?
எழுத்தாளர் கேரக்டரில் கலையரசன் சரியாக பொருந்துகிறார்.. அமானுஷ்ய விஷயங்களில் கலவையான உணர்வை வெளிப்படுத்தவும் தவறவில்லை.. ஜாடிக்கேத்த மூடியாக தன்ஷிகாவும் பொருத்தமான தேர்வுதான். மைம் கோபிக்கு வேலை குறைவுதான். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசையில் ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது
அந்த முகமூடி கில்லர் விஷயத்தில் வைத்த ட்விஸ்ட் ஒகேதான் என்றாலும் படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் விக்கி ஆனந்த் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வழக்கமான ஹாரர் படங்களில் வருவது மாதிரி முறைத்து பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு ஊமை கேரக்டர், சில பயமுறுத்தல்கள் என்று பயணிக்கும் முதல் பாதி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இருந்தாலும் முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்