வி1 – விமர்சனம்


நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோவுக்கு ஒரு வித்தியாசமான நோய் இருக்கிறது. நிக்டோபோபியா என்று வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவர். அவரால் இருளில் தனியாக இருக்க முடியாது.

மனைவியை இழந்து சோகத்தில் இருக்கும் நாயகன் காஸ்ட்ரோ, காவல் துறை பணியில் இருந்து விலகி தடயவியல் துறையில் வகுப்பு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு பெண் கழுத்தில் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தவித்து வருகிறது

புத்திசாலித்தனமான விசாரணை அதிகாரியான அருணை திரும்ப அழைக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களின் உடல்மொழி, அசைவு என உளவியல் ரீதியாக நுன்னியமாக கவனிக்கும் அருணின் சந்தேக பார்வை பலர்மீது படர இறுதியில் உண்மையான குற்றவாளியை யார் என்பதை அருண் எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.

விசாரணை அதிகாரி கதாபாத்திரத்துக்கு ராம் அருண் காஸ்ட்ரோ கச்சிதமாக பொருந்துகிறார். முதல் படத்திலேயே இயல்பாக நடித்துள்ளார். உளவியல் ரீதியாக விசாரணை செய்யும்போது அவரது நடிப்பில் பக்குவம் தெரிகிறது.
அருணின் புலனாய்வுக்கு மட்டுமல்லாது படத்தின் நகர்வுக்கும் விஷ்ணுபிரியா பக்கபலமாக இருக்கிறார். ஆக்ஷன், துரத்தல் காட்சிகளிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா என அனைவருமே தங்களது நேர்த்தியான நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

படம் தொடங்கியது முதல் முடிவது வரை ஒரு துப்பறியும் நாவலை படித்த அனுபவம் ஏற்படுகிறது.
டிஎஸ்.கிருஷ்ணகுமாரின் ஒளிப்பதிவில் குற்றங்களின் இருளும் விசாரணையின் வெளிச்சமும் நம்மை ஆட்கொள்கிறது. ரோனி ரெபெலின் பின்னணி இசை படத்துக்கு வேகம் கொடுக்கிறது. சிஎஸ்.பிரேம் குமாரின் படத்தொகுப்பு விசாரணையை கண்முன் கொண்டு வருகிறது.

மொத்தத்தில் ஒரு துப்புறியும் விறுவிறுப்பான படமாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது “வி1” திரைப்படம்