வாத்தி ; விமர்சனம்

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாத்தி”. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
1990 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.

இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை பொறுமையை சோதிக்கும் வகையில் சொல்கிறது “வாத்தி” திரைப்படம்.

தனுஷ் படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார்.முக்கியப் பிரச்சினையைப் பேசும் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்காக தனுஷைப் பாராட்டலாம். அதேநேரம், பள்ளி இறுதி வகுப்பு மாணவன் போன்ற தோற்றத்துடன் ஆசிரியராக வருவது, சண்டைக் காட்சிகளில் ‘சூப்பர் ஹீரோ’ போல் மரண மாஸ் காட்டுவது போன்றவை நெருடல். இந்தக் காட்சிப் பிழைகள் அனைத்தையும் தனக்கேயுரிய மிகையற்ற நடிப்பால், வசன உச்சரிப்பில் காட்டும் நேர்த்தியால் தனியொருவராக படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் தனுஷ்.

கதாநாயகி சம்யுக்தாவுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். கல்வி வியாபாரியாக வரும் சமுத்திரக்கனி ‘சாட்டை’ படத்தில் ஏற்றிருந்த ஆசிரியர் கதாபாத்திரத்துக்கு நேரெதிராக வந்து, தன் கதாபாத்திரம் மீது கோபம் உருவாகும்அளவுக்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஊரில் உள்ள தியேட்டரை பயன்படுத்துவது, விதவிதமான கெட்டப் போட்டு பாடம் நடத்துவது , பாரதியார் வேடம் போட்டு தனுஷ் சண்டை போடுவது, தங்கள் பிள்ளைகளின் கல்வியை கெடுக்க நினைக்கும் ஊர் மக்கள் உடனே திருந்துவது என லாஜிக்கே இல்லாத காட்சிகள் உள்ளது. ஒரே ஒரு காட்சியில் இயக்குநர் பாரதிராஜா தலைகாட்டுகிறார். கென் கருணாஸ் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை.

படிப்பு தான் மரியாதையை சம்பாதிச்சு தரும், படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி கொடுங்க.. அதை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க, கல்வியில கிடைக்கிற காசு அரசியல்ல கிடைக்காது என ஆங்காங்கே வரும் வசனங்கள் கைதட்ட வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையும், யுவராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் வாதத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *