வடசென்னை – விமர்சனம்


பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஏழு வருடங்கள் கழித்து வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் இந்த வடசென்னை.. வெற்றிமாறனின் கனவுப்படம் என்கிற முத்திரையுடன் வெளியாகியுள்ள இந்தப்படம் இதுவரை வெளியான வடசென்னை பின்னணி கொண்ட படங்களில் இருந்து எப்படி வித்தியாசப்படுகிறது..? பார்க்கலாம்.

வடசென்னையின் முக்கிய தாதா அமீர். அவரது சிஷ்யர்கள் சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் அமீரின் மரணத்திற்குப்பின் தனித்தனியாக பிரிகின்றனர். இருந்தாலும் அமீரின் தம்பி டேனியல் பாலாஜியை தங்கள் காட்பாதராக ஏற்கின்றனர். காலப்போக்கில் அமீரின் மனைவி ஆண்ட்ரியாவை சமுத்திரக்கனி திருமணம் செய்துகொள்கிறார். இந்த சூழலில் தொண்ணூறுகளின் மத்தியில் கேரம் சாம்பியனாக ஆசைப்படும் இளைஞன் தனுஷ் ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது.

அங்கே ஏற்கனவே சிறையிருக்கும் கிஷோரின் அன்புக்கு பாத்திரமாகி யாருக்கும் சந்தேகம் வராதபடி திடீரென கிஷோரை குத்தி சாய்க்கிறார். சிறையை விட்டு வெளியே வந்தபின் வெளியே நிலவும் சூழல் காரணமாக இந்த கேங்கில் தன்னையறியாமல் நுழைகிறார். அதன்பின் தனுஷின் வாழ்க்கையில் அவரே எதிர்பாராத விதமாக அவரையும் துரோகம் துரத்துகிறது.

தனுஷ் ஏன் கிஷோரை கொல்ல முயற்சித்து அவரை நடைப்பிணமாக மாற்றியது ஏன்..? அமீரின் மரணத்திற்கு காரணம் யார்..? அமீரின் மனைவி ஆண்ட்ரியா எப்படி சமுத்திரக்கனியின் மனைவியாக மாறினார் என பல கேள்விகளுக்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

தனுஷ் ஏன் வெற்றிமாறனை, வடசென்னை படத்தை இவ்வளவுதூரம் நம்புகிறார் என்பது படம் பார்த்த பின்னர் தான் தெரிகிறது. அன்பு கேரக்டரில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொருவிதமான உடல்மொழி, வசனம் என பிரமாதப்படுத்துகிறார் தனுஷ்.

அமீர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், பவன், தீனா என எல்லோருமே வடசென்னை மனிதர்களாகவே மாறிவிட்டார்கள். அமீர் இதில் புதுமுகம் காட்டுகிறார் என்றால், டேனியல் பாலாஜிக்கும் இந்தப்படத்தில் மிக மரியாதையான வேடம். வழக்கம்போல சிண்டு முடியும் அரசியல்வாதியாக ராதாரவி.

வடசென்னை களம் என்றாலும் அதில் ஆண்ட்ரியா அம்சமாக பொருந்திப்போவது தான் ஆச்சர்யம். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்தப்படம் புகுந்து விளையாட கிடைத்த சரியான களம். கெட்ட வார்த்தை பேசும் அந்த முதல் காட்சியிலேயே கைதட்டலை அள்ளிவிடுகிறார். அவரின் தம்பியாக வரும் நபர் தனுஷுக்கு சப்போர்ட்டாக தனது தந்தைக்கு ஒரு ரிவிட் அடிக்கிறார் பாருங்கள். சூப்பர். மெட்ராஸ் ஜானி, பாவல் நவகீதன் இருவருக்கும் இந்தப்படம் மிகப்பெரிய வாய்ப்பு.. சரியாக பயன்படுத்தி இருக்கின்றனர்.

ஜெயில், குப்பம் என குறிப்பிட்ட ஏரியாவுக்குள்ளேயே கதை நகர்ந்தாலும் நமக்கு அலுப்பு தட்டாததற்கு முக்கிய காரணம் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை.. கூடவே வெற்றிமாறனின் திரைக்கதை உத்தி. வெற்றிமாறனின் எண்ணத்தில் உதித்த காட்சிகளை வெகு நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார் வேல்ராஜ். குறிப்பாக குப்பத்து காட்சிகள் இதுவரை பார்த்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு தெரிகின்றன.

வெற்றிமாறனின் பலமே அவர் எப்போது படம் இயக்குவார் என ரசிகர்களை ஏங்க வைப்பதுதான். ஆனால் கால இடைவெளி விட்டாலும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படத்தை அவர் கொடுக்க தவறியதே இல்லை. வடசென்னையிலும் அதே தான் நடந்திருக்கிறது.

சாதாரண இளைஞனான அன்பு(தனுஷ்) ஒரு தாதாவாக மாறும் சூழலை வெகு நேர்த்தியாக சொன்ன வெற்றிமாறன், அன்புவின் அதிரடியை இரண்டாம் பாகத்தில் காணுங்கள் என ஒரு எதிர்பார்ப்புடன் நம்மை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இதுவரை வெளியான படங்களின் வாயிலாக நமக்கு காட்டப்பட்டு வந்த, நாம் பார்த்து வந்த வடசென்னைக்கும் இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ள வடசென்னைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லைதான் என்றாலும், அங்குள்ள மனிதர்களின் வாயிலாக புதிய கோணத்தில், புதிய திரைக்கதை வடிவில் கதையை சொன்ன விதத்தில் தான் வெற்றிமாறன் தனித்து நிற்கிறார்.