வண்டி – விமர்சனம்


சென்னை மாநகரில் கிடைத்த வேலைக்கு போய்க்கொண்டு, எந்த இலக்குமின்றி காலத்தை ஓட்டுகிறார்கள் விதார்த் மற்றும் நண்பர்கள் இருவரும். வாடகை சிக்கலால் வீட்டை காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. கூடவே, ஒருவரிடம் கொடுக்கச்சொல்லி ஒப்டைத்த காஸ்ட்லி மொபைல்போனை விதார்த் பறிகொடுத்ததால் புதிய சிக்கல் ஒன்றும் முளைக்கிறது.

புதிய வேலையில் சேர்வதற்காக பைக் தேவைப்பட, ரயில்வே பார்க்கிங்கில் கேட் கீப்பராக இருக்கும் நண்பனின் உதவியால் பார்க்கிங்கில் நிற்கும் ஒரு பைக்கை, இல்லையில்லை ‘வண்டி’யை எடுத்துக்கொண்டு சுற்றுகிறார் விதார்த். இந்நிலையில் போலீஸ் அதிகாரி ஜான் விஜய்யின் சோதனையில் விதார்த் பிடிபட, இதுவரை நூடுல்ஸாக இருந்த சிக்கல், அடுத்து இடியாப்ப சிக்கலாக மாறுகிறது.

மொபைல்போனை பறித்து யார், அது மீண்டும் கிடைத்ததா, யாரோ ஒருவரின் வண்டி விதார்த்துக்கு கொண்டுவந்த புதிய சிக்கல் என்ன, இதிலிருந்தெல்லாம் மீள்வதற்கு விதார்த் அன் கோ நடத்தும் போரட்டங்கள் என்ன என்பது தான் மீதிப்படம்.

நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என பாராட்டப்படும் விதார்த் நல்ல படம் என நினைத்துகொண்டு நடித்துள்ள படம் இது. அதேசமயம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லைதான். விதார்த் வழக்கம்போல தனது பங்கை நிறைவாக செய்திருக்கிறார். அவரது நண்பர்களாக வரும் ஹீராம் கார்த்திக், கிஷோர் குமார் இருவரும் கூட பல இடங்களில் பளிச்சிடுகிறார்கள்.

நாயகி சாந்தினி, விதார்த்தை திட்டுவதற்காக, அவரது அப்பாவிடம் அடிக்கடி சிடுசிடுவென பேசும் காட்சிகளில் நாமே எழுந்துபோய் ஓங்கி ஒரு அறை விடலாமா (அந்த கேரக்டரைத்தான்) என தோன்றும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார். சவுண்ட் போலீஸாக வரும் ஜான்விஜய்யின் சாப்ட் டீலிங் பல இடங்களில் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

கழுத்தை சாய்த்தபடி காமெடி பண்ணும் சூப்பர்குட் சுப்பிரமணி, விதார்த் அன் கோவிற்கு ஆதரவாக படம் முழுதும் வரும் டி.ரவி, அடாவடியாக வாடகை கேட்கும் அருள்தாஸ் ஆகியோர் தாங்கள் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்கள்.

சில கிளைக்கதைகளை உருவாக்கி, அவற்றையெல்லாம் விதார்த் பிரச்சனையுடன் அழகாக முடிச்சுப்போட்டு, க்ளைமாக்ஸில் அந்த முடிச்சுக்களை ஒவ்வொன்றாய் அவிழ்க்கும் விதம் பழைய பாணி என்றாலும் இயக்குனர் ரஜீஸ்பாலா அதை நேர்த்தியாகவே செய்துள்ளார். ஆனால் அதற்காக இரண்டு பிளாஸ்பேக்குகளுக்குள் ரொம்ப நேரமாக சுற்றி வருவது தான் போரடிக்கிறது. குறிப்பாக அந்த செயின் திருடர்கள் எபிசோட்.

இருந்தாலும், இந்த வண்டி நம் பயணத்திற்கு பெரிதாக தொந்தரவு தராத வண்டி என தாராளமாக சொல்லலாம்.