வஞ்சகர் உலகம் – விமர்சனம்


போதை மருந்து கடத்தல் தலைவனான துரைராஜ் என்பவனை பிடிக்க ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி அழகம் பெருமாள், புலனாய்வு பத்திரிகையாளர்கள் விசாகன், அனிஷா ஆகியோர் முயற்சிக்கிறார்கள். இதற்காக போதை மருந்து கடத்தல் செய்யும் குரு சோமசுந்தரத்தின் உதவியை நாடுகிறார் விசாகன்.

குரு சோமசுந்தரத்திற்கு நண்பன் என்றால் உயிர்.. ஆனால் நண்பன் தனது மனைவி சாந்தினியை கொன்று விட்டான் என்கிற குற்றத்திற்காக விசாரணைக்கு ஆளாக, அவரை காப்பாற்றுவதற்காக விசாகன் கேட்கும் உதவியை செய்து தர முன் வருகிறார். இதற்கிடையே சாந்தினியின் கள்ளக்காதலனான சிபியின் பக்கம் இவர்கள் பார்வை திரும்புகிறது.. ஆனால் சிபி அந்த கொலையை செய்யவில்லை என போலீஸ் அதிகாரி வாசு விக்ரமிடம் வாதிடும் விசாகன், அந்த கொலையை யார் செய்திருப்பார் என வேறு கோணத்தில் அலசுகிறார்.

குரு சோமசுந்தரம் துரைராஜை கண்டுபிடித்து கொடுத்தாரா..? விசாகன் அவரது உதவியை நாடியதற்கு அதுதான் உண்மையான நோக்கமா..? சாந்தினியை கொலை செய்தது யார், எதற்காக என்கிற பல கேள்விகளுக்கு க்ளைமாக்சில் விடை சொல்கிறார்கள்.

குரு சோமசுந்தரம் தான் மிகச்சிறந்த நடிகர் என்பதை இந்தப்படத்திலும் காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, அலட்டல் இல்லாத நடிப்பு என இந்த குழப்பமான கதையிலும் தனித்து தெரிகிறார். புதுமுகமான சிபி புவனசந்திரன் தமிழ் சினிமாவுக்கு தான் ஒரு நம்பிக்கையான வரவு என நிரூபிக்கிறார்.நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

ஈகோ பிடித்த போலீஸ் அதிகாரியாக வாசு விக்ரம் கனகச்சிதம்.. சூழ்நிலையால் திருமணம் செய்துகொண்டு, ஆனால் தான் விரும்பியபடி வாழ நினைக்கும் பெண்களின் மனோநிலையை பிரதிபலித்திருக்கிறார் சாந்தினி. அழகம் பெருமாளுக்கு நிறைவான கேரக்டர்.. சரியாக செய்திருக்கிறார்.. அவருக்கும் குரு சோமசுந்தரத்திற்குமான க்ளைமாக்ஸ் உரையாடல் செம..

ஹாலிவுட் ஒளிப்பதிவளான ரோட்ரிகோவின் ஒளிப்பதிவும் சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையும் வித்தியாசமான கதைக்களத்தை இன்னும் வித்தியாசமாக்குகின்றன..

சினிமாவில் புதுவிதமான கதைசொல்லும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது தான்.. ஆனால் அப்படி சொல்லும் விதம் ரசிகர்களுக்கு புரியுமா என்பதையும் கொஞ்சம் யோசித்து கதைகளையும் திரைக்கதையையும் உருவாக்கினால் அந்த புதிய முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். தமிழ் சினிமா தொட பயப்படுகின்ற ஓரினச்சேர்க்கை விவகாரத்தை மிக தைரியமாக கையாண்டுள்ள இயக்குனர் மனோஜ் பீதாவை தாராளமாக பாராட்டலாம்.