வீரசிவாஜி – விமர்சனம்


தகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கியுள்ள அதிரடி ஆக்சன் படம் தான் இந்த ‘வீரசிவாஜி’. பாண்டிச்சேரியில் கால் டாக்சி ட்ரைவராக இருக்கும் விக்ரம் பிரபுவுக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள உடன்பிறவா அக்காவும் அவரது மகளும் மட்டுமே.. அக்கா மகளின் மருத்துவ சிகிச்சைக்கு 25 லட்சம் தேவைப்பட, ரோபோ சங்கர், யோகிபாபுவின் உதவியுடன் கள்ளநோட்டு மாற்றும் ஜான் விஜய் கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாறுகிறார்.

பணத்தை மீட்டே ஆகவேண்டும் என அந்த கும்பலை தேடி அலையும் விக்ரம் பிரபு, திருச்சிக்கு தப்பிய அவர்களிடம் இருந்து சாதுர்யமாக மொத்த பணத்தையும் கைப்பற்றுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் விக்ரம் பிரபுவுக்கு தலையில் அடிபட்டதால் கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்வுகள் மறந்து போகிறது.

இதனால் தான் காதலித்த ஷாலினி, தனது அக்கா மகளின் சிகிச்சை பற்றி டாக்டர் சொன்னது, ஜான் விஜய் கும்பலிடம் இருந்து அடித்த பணத்தை மறைத்து வைத்தது உள்ளிட்ட விஷயங்களும் அவருக்கு மறந்துவிடுகிறது. இந்நிலயில் அக்கா மகளின் நிலைமை சீரியஸாகவே, தன்னிடம் பணம் இருப்பது கூட தெரியாமல் பணம் புரட்ட புறப்படுகிறார். ஜான் விஜய் அன் கோ, விக்ரம் பிரபுவை தேடி பாண்டிச்சேரி வந்து அவரை கையும் களவுமாக பிடிக்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பது உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்..

விக்ரம் பிரபுவை பொறுத்தவரை அமைதியாக நடிக்க சொன்னால் செம்ம ஸ்கோர் செய்துவிடுகிறார்.. ஆக்‌ஷனில் அதிரடி காட்டினாலும் கூட, இன்னும் ரொமான்ஸில் கஷ்டப்படுகின்றார்.. அதற்கேற்ற மாதிரி காதல் காட்சிகளும் பெரிதாக இல்லாதது ஒரு குறை. பேபி ஷாம்லி தற்போது ஹீரோயினாக நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கின்றார். ஆனால், இவர் நடிப்பதற்கு கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லை, வழக்கமான ஹீரோயின் போல் காதல், டூயட் பாடி ஹீரோவுக்கு உதவும் சாதாரண கேரக்டர் என்பதில் நமக்கு ஏமாற்றமே.

படத்தின் பெரிய ப்ளஸ் யோகிபாபு, ரோபோ ஷங்கர் கூட்டணி தான். ரமேஷ், சுரேஷ் என காமெடியில் கலக்கியுள்ளனர். அதிலும் யோகி பாபு பேச ஆரம்பித்தாலே சிரிப்பு சரவெடி தான். வில்லன்களாக இருந்தாலும் மோசடிப் பேர்வழிகள் ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் இருவரும் “நம்மளை நம்புறவங்களை ஏமாத்திட்டு இந்த சரக்கையும் சைடீஸையும் சாப்பிடுறது ரொம்ப வருத்தமா இருக்குண்ணே” என்கிற ரேஞ்சில் காமெடிக்கு இறங்கியிருக்கிறார்கள்.. அக்காவாக வினோதினியும் அந்த குட்டிப்பொண்ணும் சரியான தேர்வு..

இமானின் இசையில் “தாறுமாறு தக்காளி சோறு”, “நான் தான் சொப்பன சுந்தரி….. ” ஆகிய பாடல்கள் ரசனை ஆனால் , பின்னணி இசைதான் இமானா என கேட்க வைக்கிறது. திரைகதையில் எந்த திருப்பங்களும் இல்லாததால் சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது.. இடைவேளைக்குப்பின் விக்ரம் பிரபுவுக்கு ஏற்படும் நினைவு குறைபாட்டை இன்னும் சுவாரஸ்யமாக கையாண்டிருக்கலாம்.. இருந்தாலும் ஆக்சன் பிரியர்களை இந்த வீர சிவாஜி கவரவே செய்வான்.