வடசென்னை பகுதியில் தனது குப்பத்து இளைஞர்களை எல்லாம், தனது சுயநலத்துக்காக கூலிப்படையாக மாற்றி பலிகடாவாக்குகிறார் ரவுடி பிரகாஷ்ராஜ் ஆனால் அதேபகுதியில் வசிக்கும் படித்த இளைஞன் சிவகார்த்திகேயன், மக்களை குறிப்பாக இளைஞர்களை மாற்ற முயல்கிறார்.
தான் வேலை பார்க்கும் உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் தனது நண்பன் விஜய் வசந்த் உள்ளிட்ட தனது பகுதி இளைஞர்களையும் இதுபோன்ற வேலைகளில் அப்படியே உள்ளே இழுக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கே உயரதிகாரியாக இருக்கும் பஹத் பாசில் மூலம் மார்க்கெட்டிங் வித்தையை கற்கும் சிவாவுக்கு போகப்போகத்தான், தான் பார்க்கும் வேலை கூலிப்படையை விட மோசமானது பெரியவருகிறது.
ஜங்க் புட் என்கிற பெயரிலும் மார்க்கெட்டிங் என்கிற பெயரிலும் நடக்கும் மோசடிகள், பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்து பெண்மணியான சினேகா மூலமாக சிவகார்த்திகேயனுக்கு தெரியவர, அதற்கு நியாயம் தேட, பஹத் பாசிலையும் அவரது சுயரூபம் தெரியாமலேயே கூட்டணி சேர்க்கிறார். கார்ப்பரேட் முதலாளிகளுடன் ஒரு சாதாரண வேலைக்காரனான சிவகார்த்திகேயனால் மோதி ஜெயிக்க முடிந்ததா..? அதற்கு அவர் என்ன விலை கொடுத்தார்..? இதில் பஹத் பாசிலின் ரோல் என்ன என்பது மீதிக்கதை.
இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பொறுப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தன்னால் எல்லா உணர்ச்சிகளையும் கையாள முடியும் என அழுத்தமாக பதிவுசெய்து படம் முழுதும் பொறுப்பான ‘வேலைக்காரன்’ ஆகவே மாறியுள்ளார் சிவா.
கொஞ்சமாக நெகடிவ் சாயல் கலந்த, அதேசமயம் இன்னொரு ஹீரோ என்று சொல்லும்படியாக தமிழுக்கு முதன்முதலாக என்ட்ரி கொடுத்துள்ளார் பஹத் பாசில். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் படம் முழுதும் அண்டர்பிளே நடிப்பில் அசத்தினாலும் தனக்கான வீரியத்தை காட்ட இவருக்கு க்ளைமாக்ஸில் (கூட) பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
கதாநாயகனுக்கு நம்பிக்கை கொடுக்கும் கெத்தான கேரக்டர் தான் நயன்தாராவுக்கு.. என்றாலும் குறைவான காட்சிகளே வருவது போல ஒரு உணர்வு ஏற்படவே செய்கிறது. சிவகார்த்திகேயன்-நயன்தாரா கெமிஸ்ட்ரியைக்கூட நட்பின் எல்லைக்கோட்டிலேயே நகர்த்தியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா.
படத்தில் இடம்பெற்றுள்ள நட்சத்திர பட்டாளம் தான் மலைக்க வைக்கிறது. தனது குழந்தையின் சாவுக்கு நீதிகேட்டு, அதற்கு சாட்சியாக, ஆதாரமாக தன்னையே அழித்துக்கொள்ள முயலும் கேரக்டரில் பதைபதைக்க வைக்கிறார் சினேகா. குப்பத்து ரவுடியாக அதுவும் நீண்ட நாளைக்கு பிறகு பழைய போக்கிரி, பீமா காலத்து பிரகாஷ்ராஜை இதில் பார்க்க முடிகிறது..
இன்னொரு தாதா சரத் லோகித்தஸ்வா, சிவகார்த்திகேயனின் லோக்கல் நண்பனாக விஜய் வசந்த், ரோபோ சங்கர், மார்க்கெட்டிங் நண்பனாக சதீஷ், நயன்தாராவின் கசினாக ஆர்.ஜே.பாலாஜி, கம்பெனியின் முக்கிய ‘வேலைக்காரர்’களாக தம்பிராமையா, மன்சூர் அலிகான், காளிவெங்கட், முனீஷ்காந்த், மைம் கோபி, அருள்தாஸ், சிவாவின் அப்பா அம்மாவாக சார்லி-ரோகிணி என எல்லோருமே காமெடி ப்ளஸ் குணச்சித்திர நடிப்பு என டபுள் ரோல் பண்ணியிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, கார்ப்பரேட் முதலாளிகளான மகேஷ் மஞ்ச்ரேகர், நாகிநீடு, மதுசூதன்ராவ் எல்லோருமே படத்திற்கு ரிச்னெஸ் கொடுத்திருக்கிறார்கள்.
கருத்தவன்லாம் கலீஜாம் என ஒரு பாட்டிற்கு துள்ளலாக ஆட்டம் போடவைத்து விட்டு, பின்னணி இசையில் கவனம் கூட்டியிருக்கிறார் அனிருத். ராம்ஜியின் கேமரா அடித்தட்டு, மேல் தட்டு என இரண்டுவிதமான இடங்களிலும் அலுப்பில்லாமல் நம்மை மாறிமாறி திரைக்கதையுடன் பயணிக்க வைக்கிறது. அந்த குப்பம் என்பது செட் என இயக்குனர் சொல்லியிராவிட்டால் நிச்சயம் உண்மையான குப்பம் என்றே நம்பி இருப்போம். அந்த அளவுக்கு ரொம்பவே தத்ரூபம்.
இயக்குனர் மோகன்ராஜாவின் சமூகத்தின் மீதான அக்கறையும் அதே சமூகத்தின் மீதான கோபமும் படம் முழுக்க வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக அத்தனை காமெடி நடிகர்கள் இருந்தும் காமெடியில் எல்லை மீறாமல், இத்தனை வில்லன் நடிகர்கள் இருந்தும் ஆக்சன் ரூட்டில் பயணிக்காமல் சொல்லவந்த கருத்தின் மீதே ட்ராவல் செய்திருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் கூலிப்படை கிளைக்கதையை தவிர்த்து நேரடியாக கார்பொரேட் கதை சொல்லியிருக்கலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் காலத்தில், பஹத் பாசில் 1980களின் மார்க்கெட்டிங் கிளாஸ் எடுக்கிறார். நல்ல உழைப்பு தான் என்றாலும் பல இடங்களில், ஏனோ சிவாவின் உடல்மொழி, ஜெயம் ரவி போல் உள்ளது.. நல்ல கருத்துக்கள் பல சொன்ன கதை என்றே எடுத்துக்கொண்டாலும் இதுபோன்ற சில குறைகளை தவிர்த்திருக்கலாம்.
சந்தைக்கு விற்பனைக்கு வரும் எந்த ஒரு தரம் குறைந்த பொருளிலும் நுகர்வோரின் உயிர் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் தரும் பொறுப்பில் இருப்பவர்கள் அவர்களிடம் வேலைசெய்யும் வேலைக்காரர்கள் தான். லாபநோக்கிலான அராஜகத்தை புகுத்தும் முதலாளிகளிடம் காட்டும் விசுவாசத்தை விட நம்பிக்கை வைத்து பொருட்களை வாங்கும் மக்களுக்கு அவர்கள் நேர்மையாக நடக்கவேண்டும் என பாடம் எடுத்திருக்கிறார் மோகன்ராஜா.
அவரது சமூக அக்கறைக்காகவே இந்தப்படத்தை பார்க்கலாம்.