வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்


காவல்துறை அதிகாரியாக ஓய்வுபெற்ற விவேக் வெளிநாட்டில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகனுடன் மன வருத்தத்தில் இருக்கிறார். மகனை பார்த்துவிட்டு சமாதானமாகி வருமாறு வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கிறார் உயரதிகாரி. சென்ற இடத்தில் மகனுடன் ஓரளவு பேசினாலும் மருமகளுடன் பேசாமுகமே காட்டுகிறார் விவேக். அங்கே போன இடத்தில் மகனுடன் பணிபுரியும் பூஜா தேவரியாவின் தந்தை சார்லியுடன் பழக்கம் ஆகிறார்.

விவேக் சென்ற சில நாட்களிலேயே சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. சும்மா இருக்காமல் சார்லியையும் அழைத்துக்கொண்டு தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி வெளிநாட்டிலும் துப்பறியும் வேலையில் இறங்குகிறார் விவேக். அதைத்தொடர்ந்து திடீரென ஒரு நாள் விவேக்கின் மகன் காணாமல் போகிறார்.. தன் மகள் கடத்தப்பட்டாரா..? அதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என தேடும் விவேக் அத்துடன் தனது மகனையும் சேர்த்து கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக்கதை.

வழக்கமாக பார்த்து வந்த நகைச்சுவை விவேக்கிற்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு இது குணசித்திர பாத்திரமேற்று கம்பீரமாக வலம் வருகிறார் விவேக்.. ஆங்காங்கே அவரது பிராண்ட் நகைச்சுவையும் உண்டு.. ஒரு குற்றம் எப்படி நடந்து இருக்கலாம் என தானாகவே மனதுக்குள் ஒரு விசாரணை அறையை உருவாக்கி விவேக் கேள்விகள் கேட்பது புதுசு.

விவேக்கின் மகனாக தேவ். இது அவருக்கு பொருத்தமான கதாபாத்திரம் தந்தை தம்மிடம் கோபமாக இருக்கிறார் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவரை கேஷுவலாக டீல் செய்வது அழகு.

விவேக்கின் மருமகளாக ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹென்டர்சன்.. பார்ப்பதற்கு நம்ம ஊர் ஆண்ட்ரியாவின் ஹாலிவுட் ஜெராக்ஸ் போலவே இருக்கிறார் அம்மணி.. விவேக் தன்னை புறக்கணிப்பது கண்டு அவர் மனம் நோகும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தான் ஒரு வெளிநாட்டு நடிகை என்கிற உணர்வு ஏற்படாமல் நடித்ததற்காக அவரை தாராளமாக பாராட்டலாம்

பூஜா தேவரியா அடிக்கடி கோபப்படும் பெண்ணாக வந்து, இவரிடம் எதோ மர்மம் இருக்கிறது என நம்மை எண்ண வைத்து சஸ்பென்சை மெயின்டெயின் செய்கிறார். சார்லி வழக்கம்போல குணச்சித்திர நடிப்பை பிழிந்து கொடுத்து இருக்கிறார்.

இயக்குனர் விவேக் இளங்கோவன் சஸ்பென்ஸ் உடைந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என திரைகதையை நகர்த்தியதில் சற்று தொய்வை ஏற்படுத்தி விட்டார். அதேசமயம் இரண்டு கிளைகளாக கதையை நகர்த்தி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இறுதியில் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்திருக்கிறார்.. அமெரிக்காவின் பரபரப்பற்ற ஒரு பகுதியை கொஞ்ச திரில்லுடன் சுற்றிப் பார்த்த அனுபவத்தை இந்தப்படம் ஏற்படுத்துகிறது