மலைவாழ் மக்கள் தங்கள் பூர்வீக பகுதிகளில் அமைதியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கம்பெனி தொடங்குவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கு செயற்கையாக தீ வைத்து அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களை விரட்ட முயற்சிக்கின்றனர்.
நடிகையாக இருக்கும் கஸ்தூரி அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு உதவ முயற்சி செய்கிறார்.
அங்கு ஏற்பட்ட தீ இயற்கையாக வந்தது இல்லை. செயற்கையாக ஏற்படுத்தப் பட்டது என்பதை அறிந்த நடிகை கஸ்தூரி அதற்கான ஆவணங்களை திரட்டி ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் கொடுக்க நினைக்கிறார். இந்நிலையில் மர்ம நபரால் கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார்.
இதை அறிந்த வரலட்சுமி கஸ்தூரி திரட்டிய ஆவணங்களை தேடிச் செல்கிறார். கஸ்தூரியை கொலை செய்தது யார் என்பதையும் கண்டுபிடிக்க முயல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்குகிறார் வரலட்சுமி.
இறுதியில் பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தப்பித்தாரா? கஸ்தூரி திரட்டிய ஆவணங்களை கைப்பற்றினாரா? கஸ்தூரியை கொலை செய்தவரை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரிப்போர்ட்டராக நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி உள்ளார் அர்ஜாய்.
காமெடி நடிகராக வலம் வந்த ரமேஷ் திலக் இப்படத்தில் நல்லவரா, கெட்டவரா என்று சிந்திக்க வைத்திருக்கிறார். பாடகியான மாளவிகா சுந்தர், இந்த படத்தில் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்கும் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இறுதியில் ஒரு இடத்தில் கச்சிதமாக நிற்கிறது.
பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் துணையாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வெல்வெட் நகரம்’ ரசிகர்களை கவனிக்க வைக்கிறது