நாடோடிகள், சுந்தர பாண்டியன் போன்ற நண்பர்கள் காதலுக்கு உதவிய படங்களே சசிகுமாருக்கு வெற்றியையும் நல்ல பெயரையும் கொடுத்தது. கொஞ்சமாச்சும் மாற்றி நடிக்கலாம் என முயற்சி செய்த பிரம்மன் & தாரை தப்பட்டை போன்ற படங்கள் படுத்து கொண்டதால் மீண்டும் பழைய பார்முலாவுக்கு மாறிய படமே “வெற்றிவேல்”.
மற்ற படங்களில் நண்பர்களுக்கு உதவிய சசிகுமார் இந்த படத்தில் தம்பியின் காதலுக்கு உதவுகிறார்.தற்போது வெளியாகிற படங்கள் பெரும்பாலும் கதைக்கு முக்கியக்துவம் தராமல் திரைகதையில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் வெற்றிவேல் கதையை நம்பி வெளிவந்துள்ள படம்.
தான் உண்டு தன் காதல் உண்டு என மியா ஜார்ஜை துரத்தி துரத்தி காதலிக்கிறார் சசிகுமார். ஆனால் இருவரும் காதலை சொல்லாமலே பழகி வருகிறார்கள். தன் தம்பியின் காதலியான பிரபு மகள் வர்ஷவை கடத்தி வர சமுத்திரகனி & கோ விடம் கிளம்பும் சசி எதிர்பாராத விதமாக நிகிலாவை கடத்தி விடுகின்றனர். தன் மகள் யாரையோ காதலித்து ஓடிவிட்டாள் என ஊர் சொல்ல அவமானத்தால் நிகிலாவின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார்.இதனால் சசிகுமார் தன் காதலுக்கு முழுக்கு போட்டு விட்டு நிகிலவை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த விஷயம் பிரபுவுக்கு தெரிய வர, பின்னர் சசிகுமாரின் தம்பி வர்ஷவை எப்படி கரம் பிடிக்கிறார் என்பது தான் மீதி கதை.
சசிகுமார் எப்போதும் போல் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் மாஸ் ஹீரோ போல் அறிமுக பாடல் எல்லாம் கொஞ்சம் ஓவர் ரகம். சசிகுமாரின் அப்பாவாக இளவரசுவும் அம்மாவாக ரேணுகாவும் நிறைவாக தனக்கான வேலையை செய்திருக்கிறார்கள்.
படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மூன்று நாயகிகளில் அழகான நாயகி என்றால் அது மியா ஜார்ஜ் தான். சசியின் மற்றொரு ஜோடியான நிகிலாவிற்கு படத்தில் வசனங்கள் குறைவு தான் என்றாலும் தன் கண்களாலும் உடல் மொழியாலும் நடித்து அசத்தி இருக்கிறார்.
படத்தின் வில்லியாக மாறுபட்ட ரோலில் நடித்திருக்கிறார் விஜி. அவரது மகனாக நடித்திருப்பவரும் வரவேற்க கூடியவரே. தம்பி ராமையா காமெடியின் இல்லாத குறையை திருப்தியாவே தீர்த்து இருக்கிறார்.
இமானின் இசையும் படத்திற்கு பலமே. புதுமுக இயக்குனர் வசந்தமணி தனக்கான பணியை நிறைவாகவே செய்திருக்கிறார். உதாரணமாக, இளவரசுவும் ரேணுகாவும் சசிகுமார் தனக்கு தெரியாமல் நிகிலாவை திருமணம் செய்து விட்டானே என்ற சோகத்திலும் கோபத்திலும் இருக்க அங்கே போஸ்ட் மேனை வைத்து நிகழ்த்திய சீனில் அழாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
பிரபு மனது மாறிய உடனே படம் முடிந்து விடுகிறதே. ஆனால் அதற்கு பிறகும் படத்தை 10 நிமிடம் வளர்த்திருப்பது தான் படத்தின் மைனஸ்.
மொத்தத்தில் வெற்றிவேல் உங்களின் மனம் கவர்வான்.
Rating: 3/5