வாட்ச்மேன் – விமர்சனம்


வாங்கிய கடனை மறுநாள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்.. நாளை அவரது திருமண நிச்சயதார்த்தம் என்கிற நிலையில் முதல் நாள் இரவு வேறுவழியின்றி ஆளில்லாத ஒரு வீட்டில் பணம் திருட செல்லுகிறார். உள்ளே இருக்கும் நாயிடம் மாட்டிக்கொள்ள, அது அவரை வெளியே போகவிடாமல் வீட்டிற்குள் துரத்துகிறது.

ஆனால் உள்ளே போன பின்புதான் அங்கே தீவிரவாதிகள் சிலர் புகுந்து இருப்பதும் அவர்கள் அந்த வீட்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி சுமனை கொல்ல வந்திருப்பதும் தெரியவருகிறது. தன்னை துரத்திய நாய் கூட தனது எஜமானரை காப்பாற்றுவதற்காக அந்த வீட்டுக்குள் துரத்தியதும் சுமன் மூலமாக தெரிய வருகிறது. அந்த இரவு நேரத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளிடம் இருந்து ஜி.வி.பிரகாஷ், சுமன், அந்த நாய் மூவரும் தப்பித்தார்களா என்பது மீதி கதை.

ஜி.வி.பிரகாஷுக்கு இது மற்றுமொரு படம் என்கிற அளவில்தான் கிடைத்த குறுகிய நேரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. வித்தியாசம் காட்டி விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு குறைவு. அதேசமயம் தீவிரவாதிகளுடன் மாட்டிக்கொண்டு அவர் தவிக்கும் தவிப்பை மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக சுமன். தீவிரவாதிகளிடம் வீட்டிற்குள் சிறைப்பட்டாலும் கண்களில் பயம் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே தனது பாதுகாப்பை அவர் மேற்கொள்ளும் விதம் சபாஷ். அதேபோல புருனோ என்கிற அந்த நாயும் தனது எஜமானரை காப்பாற்ற போராடும் காட்சிகள் குழந்தைகளை கவரும்.

தீவிரவாதியாக வரும் ராஜ் அர்ஜுன் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே, கொஞ்ச நேரமே வந்து போகும் யோகிபாபு இருவருக்குமான காட்சிகள் குறைவு என்பதால் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள்.

விதவிதமான கதைக்களங்களில் படம் எடுக்கும் இயக்குனர் விஜய் இந்த முறை ஏனோ புதிய முயற்சியாக இந்த படத்தில் ரிஸ்க் எடுத்துள்ளார் என்றே தெரிகிறது காரணம் படத்தை ஒரே லொக்கேஷனில் அதுவும் ஒரே வீட்டில் இரவு நேரத்தில் நடக்கும் காட்சிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத படத்தையும் முடித்திருக்கிறார். அதுவே படத்திற்கு பலவீனமும் கூட.

பயங்கரமான தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடும் சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்காமல் இருக்குமா..? கொலைகாரர்களில் ஒருவரை ஒரு அறையில் தள்ளிய நாயின் புத்திசாலித்தனத்தால் அந்த அறை தீப்பற்றி எரிவது வெளியே தெரியாமல் போய்விடுமா..? அது மட்டுமல்ல அவ்வளவு பயங்கரமாக தீவிரவாதிகளில் துப்பாக்கிச்சூட்டில் இருந்து மிக எளிதாக இவர்கள் மூவருமே தப்பிப்பது ஏன் பல விஷயங்கள் நம்பும்படியாக இல்லை.. இப்படி பல கேள்விகள் படம் பார்க்கும்போது நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் படங்களை கொடுத்த இயக்குனர் விஜயிடம் இருந்து இன்னும் பெரிதாக எதிர்பார்த்தோம்.. எதிர்பார்க்கிறோம்.