யானும் தீயவன் – விமர்சனம்


சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் மாட்டிக்கொண்ட புதுமண தம்பதிகள் படும் பாடும், அவன்டமிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும் தான் இந்தப்படத்தின் கதை.

கல்லூரியில் படிக்கும் அஸ்வினும் வர்ஷாவும் காதலிக்கிறார்கள்.. இருவரும் வசதியான குடும்பம் தான் என்றாலும் வர்ஷாவின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே இருவரும் நண்பர்கள் உதவியுடன் ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெங்களூரில் வேலை கிடைக்கும் வரை தங்குவதற்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டை ஏற்பாடு செய்கிறார் நண்பன் ஒருவர்.

அதே சமயம் நகரில் பிரபலமான அரசியல் செல்வாக்குள்ள ரவுடியான ராஜூ சுந்தரம் அந்த வீட்டின் அருகில் ஒரு பெண்ணை கொலைசெய்வதை வர்ஷா பார்த்துவிடுகிறார். பெங்களூர் சென்றிருந்த அஸ்வின் திரும்பியதும் இந்த விபரத்தை சொல்ல உடனடியாக அங்கிருந்து கிளம்புகிறார்கள்.. ஆனால் அதற்குள் அங்கே வந்த ராஜூ சுந்தரம் பார்வையில் பட்டுவிடுகிறார்கள். ஏற்கனவே ஒருமுறை அஸ்வினால் தாக்கப்பட்ட ராஜுசுந்தரம் அவர்கள் இருவரையும் சிறைப்படுத்துகிறார்.

இன்னொருபக்கம் இதுவரை தனக்கு அடைக்கலம் கொடுத்துவந்த மந்திரியையே ராஜூசுந்தரம் எதிர்த்து பேசியதால், கோபமான மந்திரி, ராஜூ சுந்தரத்தை என்கவுண்டர் செய்ய உத்தரவிடுகிறார். தனது சர்வீசுக்குள் ராஜூ சுந்தரத்தின் கொட்டத்தை அடக்க காத்திருக்கும் போலீஸ் அதிகாரியான பொன்வண்ணன் வசம் அந்த வேலை ஒப்படைக்கப்படுகிறது. நாயகன்-நாயகி இருவரும் ராஜூ சுந்திரத்திடம் இருந்து தப்பித்தார்களா, போலீஸின் என்கவுண்டரில் ராஜூ சுந்தரம் சிக்கினாரா..? இதற்கு விடை சொல்கிறது மீதிப்படம்..

படத்தின் ஆரம்ப காதல் காட்சிகள் நம்மை பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.. ஆனால் ராஜு சுந்தரம் அன் கோவின் கைகளில் காதல் ஜோடி சிக்கியபின் கதையில் விறுவிறுப்பு கூடுகிறது. நாயகன் அஸ்வின் நடிப்பில் ஓரளவு பாஸ்மார்க் வாங்குகிறார்.. நாயகி வர்ஷாவோ நஸ்ரியாவின் ஜெராக்ஸ் காபி போலவே இருப்பதால் படம் முழுக்க அவரை ரசிக்க எந்த தடையும் இல்லாமல் போகிறது. இவரும் கூட வில்லனாகிட்டாரா என ஆச்சர்யத்துடனேயே நம்மை படம் முழுதும் திகைக்க வைத்திருக்கிறார் ராஜு சுந்தரம்.

போலீஸ் அதிகாரியாக பொன்வண்ணன் வழக்கம்போல மிடுக்கு காட்டியிருக்கிறார்.. பின்னணி இசையில் அச்சு ராஜாமணி திகில் கூட்ட, அவருக்கு உதவியாக ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா பயணித்திருக்கிறது. பல வருடங்களாக ராஜூ சுந்தரம் போலீஸுக்கு டிமிக்கி காட்டுவதாக சொல்வது நம்பும்படியாக இல்லை. கடைசியில் ராஜூ சுந்தரத்துக்கு என்ன ஆச்சு என சொல்வதற்கு அவ்வளவு தூரம் பில்டப்புடன் சுற்றி வளைத்து சொல்லவேண்டிய அவசியம் என்னவோ தெரியவில்லை..

‘யானும் தீயவன்’ மூலம் நானும் இருக்கிறேன்’ என நம் கவனத்தை திசைதிருப்ப முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ஜி.சேகர்..