மாயா – விமர்சனம்

தமிழ்சினிமாவில் தொடரும் பேய் சீசனில் தனது பெயரையும் பதிவுசெய்துள்ள ‘மாயா’ எந்தவிதத்தில் மற்ற பேய்ப்படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது..? பார்க்கலாம்.

கதைக்குள் கதை என்கிற சிக்கலான பாணியில் படம் உருவாகி இருப்பதால் கதையை எந்த கோணத்தில் இருந்து சொன்னாலும், படத்தில் பார்க்கும்போது மட்டுமே ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. இருந்தாலும் உங்களுக்காக ட்ரை பண்ணுகிறோம்.

சின்னச்சின்ன விளம்பரங்களில் நடிக்கும் நயன்தாரா, படங்களில் நடிப்பதற்காகவும் வாய்ப்பு தேடுகிறார். அவரது கணவரும் இதே துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் குழந்தையுடன் பிரிந்து வந்து, சினிமாவில் உதவி இயக்குனராக வேலைபார்க்கும் தனது தோழி லட்சுமி பிரியாவுடன் வசிக்கிறார்..

ஒருபக்கம் விளம்பரத்தில் நடித்ததற்கான பணம் வரவில்லை. இன்னொரு பக்கம் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி.. இந்தநிலையில் லட்சுமி பிரியா பணிபுரியும் பட இயக்குனர் மைம் கோபி, தனது படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, தனியாக அமர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு என அறிவிக்கிறார்..

இந்தப்படத்தை தனியாக பார்க்க வந்த விநியோகஸ்தர் ஒருவர் படம் முடிவதற்குள் மரணத்தை தழுவுகிறார். ஆனால் அந்த சூழலிலும் தனது பணத்தேவைக்காக தோழியின் எதிர்ப்பையும் மீறி அந்தப்படத்தை பார்க்க ஒப்புக்கொள்கிறார் நயன்தாரா. படத்தை பார்க்கும் நயன்தாராவுக்கு என்ன ஆகிறது.. அவர் உயிருடன் வந்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்…அல்ல.. அதற்கப்புறமும் கொஞ்ச நேரம் படம் இருக்கிறது. அதன்பின் தான் க்ளைமாக்ஸ்.

மென்சோகத்தை முகத்தில் தேக்கியபடி வலம் வரும் கேரக்டர் என்றால் அதற்கு நயன்தாரா தான் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. ஆனால் படத்தில் அந்த விதிக்கு தனது நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார் நயன்தாரா. குறிப்பாக தனது குழந்தைக்காக, தனது தன்மானத்திற்காக பிடிவாதம் காட்டும் நயன்தாராவின் கேரக்டர், நமக்கு மட்டுமல்ல அவருக்கும் புது அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

நயன்தாராவின் விஸ்வரூபத்தால் எந்த விதத்திலும் பாதிக்கப்படமால் தப்புகிறார் ஆரி.. காரணம் அதற்கேற்ற மாதிரி திரைக்கதையும் இரண்டு ட்ராக்குகளாக பிரிந்து அவரை காப்பாற்றி விடுகிறது. கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் ஆரி..

உதவி இயக்குனராக வரும் லட்சுமி பிரியாவுக்கு, பாசிட்டிவ் எனர்ஜியை தோற்றுவிக்கும் விதமாக, மனதில் நிற்கும் நல்ல கேரக்டர்.. இயக்குனராக மைம் கோபி துல்லியமான தேர்வு.. அவரை வைத்து பின்னப்பட்ட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அதுவும் ஒகே.. அட.. அம்ஜத்கான் (பர்மா), ரோபா சங்கர் எல்லாம் இந்த மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டாங்களா..? அடக்கொடுமையே… நன்றாக பண்ணியிருக்கிறார்கள் பாஸ்…

பின்னணி இசையில் படம் பார்ப்பவர்களை தொடர்ந்த டெரர் மூடிலேயே உட்கார வைக்கிறது. ரோன் எதன் ரோஹனின் பின்ன இசை. பிளாக் அன்ட் ஒயிட் காட்சிகள் மூலம் பயம் காட்டும் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கச்சிதம் பேய்ப்படங்களுக்கான வழக்கமான கிளிஷேக்கள் இதிலும் இருக்கின்றன. ஆனாலும் அவற்றை தேவையான இடங்களில் பயன்படுத்தி, இருவேறு கதைகளில் பயணித்து அவற்றை ஒன்றாக முடிச்சிட்டு, பின்னர் முடிச்சை அவிழ்க்கும் விதத்தில் தான் வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்..

இரண்டு கதைகளையும் ஒன்றாக இணைக்கும் விதம் சூப்பர் என்றாலும், படம் பாமர ரசிகன் கொஞ்சம் குழப்பத்துடன் தலையை சொறியத்தான் செய்வான். மாயவனம் காட்டுக்குள் பேய்கள் உலாவும் இடத்தில், கொஞ்ச நேரம் பயம் விட்டு போகும்படி காட்சி நகர்வது மைனஸ். அதேசமயம் தாய் மடியில்.. ஸாரி, பேய்மடியில் நயன்தாரா தலைவைத்து படுத்திருக்கும் காட்சி நெகிழ வைக்கிறது.

பேயின் எண்ணம் என்ன என்பது கடைசி இருபது நிமிடத்தில் தான் நமக்கு தெரிகிறது.. ஆனாலும் இதற்காக இப்படி சுற்றி வளைத்த விளையாட்டில் இறங்கவேண்டுமா என்கிற கேள்வியும் எழுகிறது. கண்ணை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் சிமிட்டாமல் கவனித்து பார்த்தால், மாயா உங்களுக்கு புதுவித பேய் அனுபவத்தை தருவாள் என்பது உறுதி.