இரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்


ஒரே சம்பவத்தை வெவ்வேறு பாணியில் வெவ்வேறு நபர்களின் பார்வையில் விவரிக்கும் நான் லீனியர் பாணியிலான கதை தான் இரவுக்கு ஆயிரம் கண்கள்.. அதை சுவராஸ்யம் குறையாமல், குழப்பம் இல்லாமல் திருப்பங்கள் நிறைந்த க்ரைம் த்ரில்லராக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.

கால்டாக்ஸி ஓட்டுனர் அருள்நிதி, ஹோம் நர்ஸ் ஆக வேலைபார்க்கும் மஹிமாவை காதலிக்கிறார். ஒருநாள் இரவு வீடு திரும்பும் மஹிமாவை ஒரு இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றுகிறார் வழிப்போக்கரான அஜ்மல்.. ஆனால் அதை தொடர்ந்து வரும் நாட்களில் மஹிமாவை லவ் டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறார் அஜ்மல்.. இந்தநிலையில் மஹிமாவுக்கு வேண்டியவரான கோடீஸ்வர வீட்டுப்பெண்ணான சாயாசிங் கடலில் விழுந்து தற்கொலை செய்வதை தடுத்து காப்பாற்றுகிறார்கள் இருவரும்.. அவரது இந்த முடிவுக்கு காரணம் பேஸ்புக் வழியாக நட்பாகி, சாயாசிங்கை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் அஜ்மல் தான் என்பது தெரியவருகிறது.

மஹிமா, சாயாசிங் இருவரையும் டார்ச்சர் செய்யும் அஜ்மலுக்கு பாடம் புகட்ட, நள்ளிரவில் அவர் வீட்டிற்கு செல்கிறார் அருள்நிதி.. ஆனால் அங்கே எதிர்பாராத விதமாக அஜ்மலின் கூட்டாளிகளில் ஒருவரான சுஜா வாருணீ கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் போலீஸிடம் சிக்கி மீண்டும் அவர்களிடமிருந்தும் எஸ்கேப் ஆகிறார்

அருள்நிதி. சுஜாவை கொன்றது யார். என அலசும்போது அது ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், சாயாசிங்கின் கணவர் ஜான்விஜய் என மர்ம முடிச்சாக நீள்கிறது. உண்மையான கொலையாளி யார்..? இந்த கொலைப்பழியில் இருந்து தப்பி, அஜ்மலிடம் இருந்து மஹிமா, சாயாசிங்கை அருள்நிதி காப்பாற்றினரா..? என்பதே மீதிக்கதை..

சாதாரண ஒரு ட்ரைவர் கேரக்டர் என்றாலும், இதில் அருள்நிதியை தவிர வேறு யாரையும் பொருத்தி பார்க்கமுடியவில்லை.. அவருக்கே உரிய இயல்பான அந்த சாந்தம் கலந்த கோபமுகம் இந்தப்படத்திற்கும் பிளஸ். கொலையாளி யார் என தேடி ஓடும் கட்டங்களில் அருள்நிதிக்கு மட்டுமல்ல, நமக்கே கூட ஒரு கட்டத்தில் டயர்ட் ஆகிவிடுகிறது.

ஜாடிக்கேத்த மூடியாக அருள்நிதியின் ஜோடியாக வழக்கம்போல ‘க்யூட்’ நடிப்பை கொடுத்திருகிறார் மஹிமா நம்பியார். நீண்டநாட்கள் கழித்து ஒரு பெர்பெக்ட்டான வில்லனாக அஜ்மல் மிரட்டியிருக்கிறார்.. இவரை தமிழ்சினிமா இன்னும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். சாயாசிங்கிற்கும் ஒரு நல்ல கேரக்டர்.. நிறைவாக செய்திருக்கிறார். அவரது கணவராக வழக்கம்போல சைக்கோ கதாபாத்திரத்தில் ஜான் விஜய்.

சீரியசாக செல்லும் கதையில் ஆனந்தராஜ் வந்ததும் ஆட்டோமேட்டிக்காக ஒரு கலகலப்பு தொற்றிக்கொள்கிறது.. அவரையும் ஓரளவுக்கு சிறப்பாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்.. எழுத்தாளராக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் கதையில் வலிந்து திணிக்கப்பட்டது நன்றாகவே தெரிகிறது. இரவுக்காட்சிகளில் அரவிந்த் சிங்கின் கேமரா டபுள் டூட்டி பார்த்திருக்கிறது.. பாடல்களே இல்லை என்பதை ப்ளஸ் பாயிண்ட்டாக மாற்றி, பின்னணி இசையில் வெயிட் ஏற்றியிருக்கிறார் சாம் சி.எஸ்.

ஆங்காங்கே எதிர்ப்படும் ட்விஸ்ட்டுகள் நன்றாக இருந்தாலும் கதை பல முறை பார்த்து சலித்த ஒன்றாகவே இருப்பது பலவீனம்.. வழக்கமான ஒரு கொலை, அதன் பின்னணியில் யார் என ட்விஸ்ட் வைத்து நகர்த்துவது என்கிற நாவல் பாணியில் கதையை உருவாக்கி போரடிக்காமல் நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் மு.மாறன்..

கணவனின் அன்பு கிடைக்காமல் ஏங்கும் மனைவி, மனைவி இல்லாமல் தனிமையில் தவிக்கும் ஆண்கள் இவர்களின் வாழ்க்கையில் பணம் பறிக்கும் விஷக்கிருமிகள் எவ்வவாறு ஊடுருவுகிறார்கள் என ஒரு விழிப்புணர்வு மெசேஜையும் சொல்லியிருப்பதற்காக இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *