டெலிபதி என ஒரு சிலர் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஒருவரின் மனதில் இருக்கும் உணர்வை, அவருடைய செயலை இன்னொருவரால் அதேசமயத்தில் அறிய முடிகிறதெனில் அதை ‘டெலிபதி’ என்பார்கள். உதாரணமாக நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாமல் இருந்த உங்கள் நண்பருக்கு போன் செய்யலாம் என ஏதேச்சையாக நீங்கள் போனை எடுக்கும்போது உங்களது நண்பர் உங்களை அழைத்தால் எப்படி இருக்கும்.. அதுதான் டெலிபதி.. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த ‘நுண்ணுணர்வு’ படமும்..
கதை ஆஸ்திரேலியாவில் நிகழ்கிறது.. நாயகி இந்திரா டெலிபதி ஆராய்ச்சி மாணவி.. அவரது தந்தை நாவல் எழுத்தாளர். ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக வேலைபார்ப்பவர் மதிவாணன் சக்திவேல். தனது மருத்துவமனைக்கு வரும் இந்திராவை பார்த்தவுடன் பிடிக்கிறது மதிவாணனுக்கு.
ஆனால் தொடர்ந்து ஒருவருக்கொருவர் நேரில் பேசாவிட்டாலும் கூட ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையில் அனைத்துவித கஷ்டங்களும், விஷயங்களும் தானாகவே பரிமாறுகின்றன. அவர்களால் ஒருவரையொருவர் பார்க்க முடியாவிட்டாலும் டெலிபதி மூலம் பேச முடிகிறது.
இந்தநிலையில் மதிவானனுடன் நண்பன் என்கிற பெயரில் தங்கியிருக்கும் நபரால் மதிவாணனுக்கும் அதை தொடர்ந்து அவர் காதலிக்கும் இந்திராவுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.. இதிலிருந்து இருவரும் சாமர்த்தியமாக எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை..
ஒரு பரபரப்பான த்ரில்லர் படங்களுக்கு உண்டான அம்சம் இந்தக்கதையில் இருக்கிறது.. அவ்வளவு ஏன், திரைக்கதையில் வித்தியாசம் காட்டி, முன்னணி ஹீரோவை நடிக்க வைத்திருந்தால் சூப்பர் ஹிட்டாக கூட ஆகியிருக்கும்.. ஆனால் படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் மதிவாணன் சக்திவேல் உள்ளிட்ட குழுவினர் அனைவரும் புதியவர்கள் என்பதால் தங்களால் முடிந்தவரை படத்தை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சித்திருக்கிறார்கள்.. மதிவாணன், இந்திரா, அவரது தந்தை உட்பட பலரின் நடிப்பும் பரவாயில்லை.
டெலிபதி விஷயத்தை சாமான்யனுக்கும் புரியும் விதமாக இன்னும் கொஞ்சம் அலசியிருக்கலாம். படத்திற்கு ஒளிப்பதிவு ரொம்பவே பலவீனம். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் தமிழ் மொழியை அழகாக கையாண்டு இருக்கிறார்கள். விறுவிறுப்பான படம் என்பதால் ஒருமுறை பார்ப்பதற்கு ஏதுவான படம் தான் இந்த ‘நுண்ணுணர்வு’.