கிராமத்தில் ஊர் தலைவரின் மகள் லீலா (ரூபா கொடுவையூர்). ஒருநாள் இரவு லீலா தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது மரணத்துக்கு ஆஸ்துமாவே காரணம் என ஊர் மக்களும், குடும்பத்தினரும் நம்புகின்றனர். இந்நிலையில் இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது, இளைஞர்கள் யாரும் தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருப்பதோடு, திடீரென்று சடலத்தில் அசைவுகள் தெரிகிறது.
இதனால் துக்க வீட்டில் சற்று சலசலப்பு ஏற்பட, மீண்டும் சடலத்தை தூக்க முயற்சிக்கும் போது அந்த சடலம் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. . உண்மையில் லீலாவின் மரணத்துக்கு என்ன காரணம்? லீலாவின் வீட்டில் இருக்கும் மர்ம அறைக்கான பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ‘எமகாதகி’.
லீலாவாக திரையில் தோன்றும் நடிகை ரூபா கொடவாயூர் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞர் என்பதால் கதாபாத்திரத்தின் உணர்வை துல்லியமாக உள்வாங்கி அழகாகவும் , நேர்த்தியாகவும் பிரதிபலித்து ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைகிறார். குறிப்பாக சடலமாக நடிக்கும் போதும் அவர் வெளிப்படுத்தும் பாவனை அழகு.
லீலாவின் காதலரான அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நாகேந்திர பிரசாத், லீலாவின் சகோதரர் முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சபாஷ் ராமசாமி,இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
லீலாவின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் ராஜு ராஜப்பனும் இயல்பாக நடித்து, அந்த கதாபாத்திரத்தை உயிரூட்டி இருக்கிறார். இவர்கள் எல்லாரையும் விட நீலாவின் தாயாக நடித்திருக்கும் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கீதா கைலாசம் உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
கிராமம் , ஒரு வீடு , அதற்குள் ஒரு பிணம் , குறைவான மக்கள், எனும் இந்த கதை களத்தின் பின்னணியில் சுப்பர் நேச்சுரல் திரில்லர் அம்சங்களை நேர்த்தியாக வழங்கி, ரசிகர்களை சில அற்புதமான பட மாளிகை அனுபவத்தை உணரச் செய்த ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், பின்னணி இசையை தந்த இசையமைப்பாளர் ஜெஸின் ஜோர்ஜ் ஆகியோரை தாராளமாக பாராட்டலாம்
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் எழுதி இயக்கியிருக்கிறார்.நாயகன் நாயகிக்கான காதல் காட்சிகளில் இனிமை சேர்த்திருக்கிறார்.மையக்கதையில் இருக்கும் அழுத்தத்தை அலுப்பின்றி உணரும் வகையில் காட்சிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார். நம் மன்னூக்குரிய கதையைத் தேர்வு செய்து, படத்தின் தொடக்கத்திலிருந்தே தொய்வில்லாத அழுத்தமான திரைக்கதை அமைத்து புதுமையான கதைசொல்லல் மூலம் தனித்துவமான இயக்குநராக வெளிப்பட்டிருக்கிறார்.