மோகன்லாலுக்கு எதிர் கருத்து சொன்ன விஷாலை திருப்பித்தாக்கிய ‘பூமராங்’..!

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என நியூட்டன் சொல்லியிருப்பதாக புத்தகத்தில் படித்த ஞாபகம்.. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதத்தில் அது ஒர்க் அவுட் ஆகியிருக்கும். ஆனால் விஷாலுக்கு சமீபத்தில் வேறுவிதமாக அது திருப்பி தாக்கியிருகிறது.

கேரளாவில் தெருநாய்களின் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதனால் அங்கே நாய்களை கொல்லவேண்டும் என பொதுமக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தாத குறையாக சொல்லி வருகிறார்கள். வழக்கம் போல நாய்ப்பாசம் காட்டும் ஒரு சில நடிகைகளுக்கு எதிராக கடும் கண்டனங்களையும் சோஷியல் மீடியாக்களில் தெரிவித்து வருகிறார்கள்..

நடிகர் மோகன்லால் தெருநாய்களின் பிரச்சனையில் உள்ள சீரியஸை உணர்ந்து நாய்களை கொல்லவேண்டியது காலத்தின் அவசியம் என கருத்து கூறியுள்ளார். இங்கே நமது விஷாலோ நாய்களை கொல்லக்கூடாது என போஸ்டர் பிடித்தபடி சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்தார். இதை பார்த்த மலையாளிகளில் சிலர் விஷால் பக்கம் தங்களது கண்டன அம்புகளை திருப்பியுள்ளனர்.

“மனிதர்களோ நாய்களோ எல்லோருக்கும் வாழ உரிமை உண்டு.. நாய்கள் கொல்லப்பட கூடாது’ என அவற்றின் மீது போலி அன்பு கட்டும் விஷால், அதேபோல தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வரும் ரசாயனம் கலந்த காய்கறிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதையும் கவனத்தில் வைத்து தமிழர்களோ, மலையாளிகளோ எல்லோருக்கும் வாழ உரிமை உண்டு என குரல் கொடுப்பாரா” என கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.

வீட்டிற்குள்ளேயே ஆளுயர நாய்களை அடக்கி ஆண்டு பழகியவர்களுக்கு, தெருநாய்களின் வெறியாட்டம் எப்படி தெரியவரும்.. சாலைகளில் இறங்கி நடந்தால் தானே..? என்றும் சிலர் கலாய்த்திருக்கிறார்கள். ஒருவர் ஒருபடி மேலேபோய் விஷால் வைத்துள்ள ஸ்லோகன் அட்டையில் ‘ஸ்டாப் கில்லிங் மலையாளீஸ்’ என மாற்றி எழுதி, அதையும் பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.. பாவம்.. தெருநாய்கள் விவகாரத்தில் குரல் கொடுக்கப்போய் ரசாயன காய்கறி விவகாரத்தில் மாட்டிக்கொண்டாரே விஷால்.