இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத, கருணாஸ் நடத்தும் டிவி சேனல் ஒன்றில் அசோக் செல்வனுக்கு வேலை கிடைக்கிறது.. மிட்நைட் மருத்துவ கில்மா நிகழ்ச்சி ஒன்றைத்தவிர, வேறு எதற்காகவும் யாருமே பார்க்காத அந்த சேனலை பாப்புலராக்க அங்கே வேலை பார்க்கும் ஜெகனுடன் சேர்ந்துகொண்டு,திட்டம் போடுகிறார்.
ஒரு புதிய ஐடியாவாக திருமணத்தில் ஒன்றுசேர நினைக்கும் உண்மை காதலர்களை, அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் சேர்த்துவைக்கும் நிகழ்ச்சியை ஊர்வசியை வைத்து ஆரம்பிக்கிறார்கள் இருவரும்.. ஆரம்பத்தில் நாடக நடிகர்களை வைத்து செட்டப் புரோகிராம் நடத்தி சேனலை ரேட்டிங்கில் மேலே கொண்டுவருகிறார்கள்.
இந்த நேரத்தில் ஒரு அரசியல்வாதியின் பொண்ணும், ஜாதிக்கட்சி தலைவரின் பையனும் காதலித்து, இவர்களிடம் தஞ்சம் அடைகிறார்கள். இந்த நிஜ சவாலை சமாளித்து, அந்த ஜோடிகளை சேர்த்து வைத்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
முதல் பாதி முழுக்க அசோக் செல்வன், பிந்து மாதவியை ஜொள்ளு விட்டு சுற்றுவதிலும், ஜெகனுடன் சேர்ந்து மொக்கை காமெடி பண்ணுவதிலேயும் நேரத்தை கடத்தி சோதிக்கிறார்கள்.. ஆனால் இடைவேளைக்குப்பின் அதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் வஞ்சனை இல்லாமல் சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
சீரியஸ் அசோக் செல்வன், இதில் காமெடி ஏரியாவுக்குள் ஓசி பாஸ் வாங்க முயன்றிருக்கிறார். கதாநாயகி பிந்து மாதவிக்கு ஹீரோவின் தங்கையுடன் சேர்ந்து சுற்றும் வேலை மட்டும் தான். இடைவேளைக்குப்பின் இரண்டு காட்சிகளில் மட்டும் தலையை காட்டிவிட்டு ‘யெஸ் பாஸ்’ சொல்லிவிட்டு போகிறார் அவ்வளவுதான்..
அசோக் செல்வனின் தங்கையாக வரும் ஸ்வாதி செம க்யூட்.. இருவருக்குமான அண்ணன் – தங்கை கெமிஸ்ட்ரி சுவாரஸ்யம் கூட்டுகிறது. இடைவேளைக்குப்பின் ஊர்வசி வந்ததும் தான் படமே களைகட்டுகிறது. அவருடன் சேர்ந்தபின்னர் தான் ஜெகனின் காமெடியும் எடுபடுகிறது. கூடவே மனோபாளவும் சேர்ந்துகொள்ள அதகளம் தான் போங்கள்….
கருணாஸ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மூவருமே அளவாக கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து ஒரே அலைவரிசையில் பயணித்திருக்கிறார்கள்.. ஊர்வசியின் கடைசி முப்பது நிமிட காமெடி, முதல் பாதி இழுவை கொடுத்த டென்சனை தனித்து விடுகிறது. ஆனால் இடைவேளைக்குப்பின் தான் படத்தை விறுவிறுப்பாக்க வேண்டும் என சட்டம் இருக்கிறதா என்ன..? இயக்குனர் சத்யசிவா அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
முன் பாதியில் கோட்டைவிட்ட சில அம்சங்களை கவனித்து, அசோக் செல்வன் – பிந்து மாதவி காதலில் ஒரு நெருக்கத்தை உருவாக்கியிருந்தால் படம் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மனதில் ஒட்டியிருக்கும்… இருந்தாலும் ஒரு காமெடி படமாக கொடுக்க முயற்சி செய்த இயக்குனர் சத்யசிவா, அந்த முயற்சியில் தாரளமாக பாஸ் மார்க்.. இல்லை அதுக்கும் மேலே கொஞ்சம் அதிகமாகவே வாங்கிவிட்டார்.