இன்றைக்கு, இல்லையில்லை.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தே ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே அந்தப்படத்தில் எங்கள் சமுதாயத்தை, அல்லது எங்கள் தொழிலை தவறாக சித்தரித்துள்ளனர் என்று சொல்லி படத்தை தடைசெய்ய சொல்லி வெவ்வேறு அமைப்புகள் போராட கிளம்புவது வாடிக்கையாகி விட்டது.
இப்போது அப்படி போராட கிளம்பியுள்ளவர்கள் கட்டட தொழிலாளர்கள் சங்கத்தினர். இவர்களிடம் மாட்டிக்கொண்ட படம் ‘அஞ்சுக்கு ஒண்ணு’.. புதுமுகங்கள் என்றில்லாமல் ஒன்றிரண்டு படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களுக்கு அறிமுகமான முகங்கள் தான் இந்தப்படத்தில் நடித்துள்ளார்களாம். இந்தப்படத்தை ஆர்வியார் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் டைட்டிலே வில்லங்கமாக இருக்கிறது இல்லையா..?
இந்தப்படத்தில் கட்டட தொழிலாளர்களாக வேலைபார்க்கும் பெண்கள் தங்களுக்கு தினசரி வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக எதற்கும் துணிவார்கள் என்கிற மாதிரியும், கட்டட வேலை செய்யும் ஆண்கள் இப்படித்தான் பெண்களை தவறாக பயன்படுத்துவது போலவும் படமாக்கியிருப்பதாகத்தான் கொந்தளித்துள்ளார்கள்..
விளைவு.. விரைவில் ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என கூட்டம் நடத்தி போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.. இதனால் அரண்டுபோன பட தயாரிப்பாளர் தரப்பு, உடனடியாக பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் கொடுத்துள்ளார்கள்..
அதில், “நாங்கள் கட்டட தொழிலாளர்களை தவறாக சித்தரிக்கவில்லை என்றும், படம் பார்க்காமலேயே எங்கள் மீது குற்றம் சாட்டுவதும் படத்தை தடை செய்வதும் நியாயமில்லை.. திட்டமிட்டபடி படம் வெளியாகும். படம் வெளியானபின் அவர்களே உண்மையை அறிந்துகொள்வார்கள்” என கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்..
அதுசரி.. படத்தின் கதைதான் என்னவாம்..? கட்டட வேலை செய்து இஷ்டம்போல வாழ்க்கையை ஓட்டும் ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.. அதன்பின் அவர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதுதான் கதை. இதை வைத்து தான் இந்த ‘அஞ்சுக்கு ஒண்ணு’ என்கிற படம் உருவாகியுள்ளதாம்.