யுடிவியை தமிழ்நாட்டை விட்டு மூட்டைகட்ட வைத்த கலைப்புலி தாணு..!

பிரமாண்டத்துக்கு பெயர்போன தயாரிப்பு நிறுவனம் யுடிவி மோஷன் பிக்சர்ஸ்.. பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் இந்த நிறுவனம் நான்கைந்து வருடங்களுக்கு முன் தமிழகத்திலும் தங்களது கிளை பரப்ப உள்ளே நுழைந்தது.. தனஞ்செயனை இணை தயாரிப்பாளராக கொண்டு பெரிய பட்ஜெட் படங்களை தனியாகவும் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்தும் தயாரித்து வந்தது.. இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘யட்சன்’ படத்தோடு தமிழகத்தில் தங்களது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்புகிறது யுடிவி..

இது ஒரு தற்காலிக இடைவெளிதான் என சமீபத்தில் நடைபெற்ற ‘யட்சன்’ புத்தக வெளியீட்டு விழாவில் மிகுந்த மன வருத்ததோடு தனஞ்செயன் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய நிறுவனம் தோல்விகளை கண்டு அஞ்சியா வெளியேறுகிறது என்றால் நிச்சயமாக இல்லை.. அதெல்லாம் அவர்களுக்கு ஜுஜுபி மேட்டர்.

அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற காரணம் கலைப்புலி தான்வின் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விதித்து வரும் கெடுபிடிகள் தான்.. யுடிவி போன்ற நிறுவனங்கள் தோல்வியை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டர்கள்.. அவர்களுக்கு விளம்பரப்படுத்துதலும் மார்க்கெட்டிங்கும் தான் மிக முக்கியம்.. அதன் மூலம் தங்களது தோல்விப்படத்தை கூட லாபமாக மாற்றிவிடுவார்கள்..

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருந்து சேனல்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளால் அவை படங்களை வாங்குவதை குறைத்துக்கொண்டன. இதனால் படத்திற்கான சாட்டிலைட் வருமானம் வராமல் பெண்டிங்கிலேயே நிற்கும் சூழ்நிலை.. இதனால் மார்க்கெட்டிங் பாதிக்கப்படுகிறது. அதேபோல பேப்பரிலும் டிவியிலும் விளம்பரம் செய்வதற்கு கொண்டுவந்துள்ள கெடுபிடியும் இன்னொரு காரணம்..

இன்னொரு பக்கம் சினிமா விழாக்களுக்கு இனிமேல் குறைந்த அளவிலான சேனல்கள், பத்திரிகைகள், இணையதளங்களை மட்டும் அழைப்பதாக எடுத்து தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவு, யுடிவியின் விளம்பர யுக்திக்கே வெட்டு வைப்பதாக அமைந்துவிட்டது.. பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய அவர்கள் தயார்..

ஆனால் இத்தனை கெடுபிடிகள் இருந்தால் தங்களால் நிம்மதியாக தொழில் செய்யவும் முடியாது.. லாபம் வராவிட்டாலும், போட்ட காசைக்கூட அள்ளமுடியாத நிலைமை.. எப்படியும் நிலைமை ஒருநாள் சீராகும் என்பதால், அதுவரை தற்காலிக இடைவெளி விட்டு, தமிழகத்தை விட்டு கிளம்புகிறது யுடிவி.