இயக்குனர் பாண்டிராஜ் தனக்கென உள்ள அடையாளத்தை மாற்ற முயற்சித்து விஷாலுடன் ஆக்சன் ‘கதகளி’ ஆடியுள்ளார்.. ஆட்டம் அவருக்கு கைகொடுத்துள்ளதா..?
கதை…? கடலூரில் தம்பா என்கிற ரவுடி திடீரென கொல்லப்படுகிறார். இதில் வெளிநாட்டில் இருந்து தனது திருமணத்துக்காக வந்திருக்கும் விஷால், உள்ளூரில் இருக்கும் அவரது அண்ணன் மைம் கோபி, அவரது நண்பர் எம்.எல்.ஏ.வின் மகனான பவன், தம்பாவின் மச்சான்கள் இருவர், தம்பாவின் வலது கையான விஷாலின் நண்பன் என பலர் மீதும் சந்தேகப்பர்வையை திருப்புகிறார் இன்ஸ்பெக்டரான ஸ்ரீஜித் ரவி.
இந்த சூழலில் தம்பாவின் வலதுகையாக இருக்கும் விஷாலின் நண்பன் போலீசில் விஷால் தான் கொன்றிருப்பார் என புகார் அளிக்கிறார். சென்னை சென்ற விஷாலை கடலூருக்கு வரச்சொல்லும் இன்ஸ்பெக்டர், தன் பங்கிற்கு விஷாலை இந்த வழக்கில் சிக்கவைக்க தீவிரமாக முயற்சிக்க, தம்பாவின் மச்சான்களோ விஷால் வீட்டையே கொளுத்துகிறார்கள். அவரது அண்ணன் குடும்பத்துடன் தப்பி ஓட, கடலூர் வரும் விஷாலை போட்டுத்தள்ள காத்திருக்கின்றனர் ரவுடிகள்..
விஷால் யாரிடம் சிக்கினார். அல்லது சிக்காமல் இந்த பிரச்சனையை எப்படி டீல் பண்ணினார், தம்பாவை கொன்றது யார் என ஒரு சில ட்விஸ்ட்களுடன் சுபம் போடுகிறார் பாண்டிராஜ்..
கொலையை யார் செய்தது..? இதுதான் மொத்தப்படமும். இந்த வட்டத்திற்குள் ஆக்சனுக்கு வேலை குறைவாக இருந்தாலும் விஷால் நின்று விளையாடுகிறார். பதைபதைப்பு, கோபம் என வழக்கமான ‘சண்டக்கோழி’யாக ‘திமிரு’கிறார் விஷால்.
க்யூட் கேத்தரின் தெரசா.. கமர்ஷியல் ஹீரோயின் என்கிற மீட்டர் மீறாத எல்லையில் கச்சிதமாக பயணித்திருக்கிறார். ரவுடி தம்பாவாக ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகி பொசுக்கென உயிரை விடுகிறார் மதுசூதனன். மைம் கோபியின் பாசம், பதற்றம் அவ்வளவு இயல்பாக இருக்கின்றன. காமெடிக்கு கருணாசும் இமான் அண்ணாச்சியும் கொஞ்ச நேரத்தை கலகலப்பாக கடத்த உதவுகிறார்கள். ரவுடி குரூப்பும் ஓகே தான்.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதியில் இடம் பெறும் காட்சிகள் இருட்டிலேயே அமைந்திருக்கின்றன. கூடவே மழையும் காட்சிகளின் வீரியத்தை கூட்டுகிறது. அதை அவரது கேமரா கண்கள் அழகாக படம் பிடித்திருக்கின்றன. ஆதியின் இசை பெரிதாக எடுபடவில்லை. ஆக்சன் காட்சிகளில் பிஜிஎம்மில் தடுமாறியிருக்கிறார்.
பாண்டிராஜின் பேவரிட்டான செல்போன் இந்தப்படத்தில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது. ராங் நம்பர் காதல், ஸ்கெட்ச் போடுவது, கூடவே ட்விஸ்ட் அடிப்பது என கமர்ஷியல் மசாலாவை கிளறியிருக்கிறார். சுவைதான்… ஆனால் பதம் தான் கொஞ்சம் குறைந்துவிட்டது.