ராஜா மந்திரி – விமர்சனம்


கிராமத்தில் உள்ள இரண்டு பாசகார அண்ணன் தம்பிகளும் அவர்களின் காதலும் தான் இந்த ராஜா மந்திரி’ படத்தின் அடிநாதம்..

அண்ணன் காளி வெங்கட் கிராமத்தில் பக்கத்து வீட்டுப்பெண் வைசாலியை காதலித்து அதை அவரிடம் சொல்லமுடியாமல் தவிக்கிறார்.. தம்பி கலையரசனோ கல்லூரிக்கு படிக்கப்போன இடத்தில் ஷாலின் சோயா என்கிற மாணவியை காதலிக்கிறார். மீண்டும் கிராமத்துக்கு வரும் கலையரசன், இன்னமும் தனது அண்ணன் காதலை சொல்லாமல் இருப்பது கண்டு அவரை தூண்டி விடுகிறார்.

இது எதிர்பாராத விதமாக இருவரின் குடும்பத்திலும் சண்டை மூட்ட, வைசாலியின் குடும்பம் ஊரைவிட்டே கிளம்புகிறது. இன்னொரு பக்கம் தம்பி கலையரசனின் காதலுக்கும் எதிரபாராத சிக்கல் வருகிறது.. இருவரின் காதலும் சோகத்தில் முடிந்ததா, சுபமாக முடிந்ததா என்பதை மனம் நெகிழ சொல்லியிருக்கிறார்கள்.

கதாநாயகன் கலையரசன் தான் என்றாலும் கதையின் நாயகனாக வரும் காளி வெங்கட் தான் படம் முழுது போர், சிக்ஸர் என ஸ்கோர் பண்ணுகிறார். வைசாலியை அவர் டாவடிக்கும் சீன்கள் எல்லாம் செம.. அதிலும் அந்த ‘எதிர்த்த வீட்டு காலிப்ளவரே’ பாடல் சான்ஸே இல்லை. ஆனால் கிளைமாக்ஸில் நெகிழ வைத்துவிடுகிறார் மனிதர்.

கலையரசனும் காமெடியில் இறங்கி கலக்க முயற்சி செய்து ஓரளவு தேறவும் செய்கிறார். இந்த இருவருடன் கூட்டணி லூட்டி அடிக்கும் பாலசரவணன் காமெடியில் நாளுக்கு நாள் பக்குவமும் முதிர்ச்சியும் தெரிகிறது.. கல்லூரி நாயகியாக வரும் ஷாலின் சோயாவைவிட, அமைதியாக அதிகம் பேசாமல் பார்வையாலேயே நம்மை வசீகரிக்கும் வைசாலி அதிக மதிப்பெண்கள் ஸ்கோர் செய்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்துக்கு கதைக்கு இன்னும் மெருகு சேர்த்துள்ளது. அறிமுக இயக்குனரான உஷா கிருஷ்ணன் அழகான ஒரு கிராமத்து விருந்தை பரிமாறியுள்ளார் என்றே சொல்லலாம்.

பெண் இயக்குனர் என்றாலும் ஆண், பெண் இருவரின் பிரச்சனைகளையும் உஷா கிருஷ்ணன் சமமாக அணுகியுள்ளது பாராட்ட வேண்டிய அம்சம்.. காமெடி கலாட்டாவாக வெளியாகி இருக்கும் இந்தப்படத்தை தேடிப்போய் பார்க்கலாம்.

Rating:3/5