மெட்ரோ – விமர்னம்

நகரத்தில் நடைபெறும் செயின் பறிப்பு சம்பவங்களின் பின்னணியை திகிலுடன் விவரிக்கும் படம்தான் இந்த ‘மெட்ரோ’..

கார், பைக் என கல்லூரி செல்ல ஆசைப்படும் கல்லூரி மாணவர்களை செயின் பறிக்கும் திருடர்களாக மாற்றி பணம் சம்பாதிக்கும் கும்பலின் தலைவன் தான் பாபி சிம்ஹா. ரிட்டையர்டு கான்ஸ்டபிள் ராஜாவின் மூத்த மகன் சிரிஷ் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலைபார்க்க, இளையமகன் சத்யா கல்லூரி செல்கிறார்..

காஸ்ட்லி பைக், செல்போன் என உல்லாசமாக வாழ ஆசைப்படும் சத்யா பாபி சிம்ஹாவின் கும்பலில் சேர்கிறார். ஒருகட்டத்தில் இந்த உண்மையை தெரிந்துகொள்ளும் தனது தாயையும் கொல்கிறார். தாயின் சாவுக்கு காரணமான கொலைகாரனை தேடி அண்ணன் சிரிஷ் கிளம்புகிறார். தம்பிதான் குற்றவாளி என்பதை அறிந்து அதிர்ச்சியாகும் சிரிஷ் என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

அண்ணனாக வரும் சிரிஷின் கதாபாத்திரம் நடுத்தர குடும்பத்து இளைஞனின் யதார்த்த முகத்தை பிரதிபலிக்கிறது.. தம்பியாக நடித்திருக்கும் சத்யாவின் கதாபாத்திரம் படிப்படியாக அவர் எப்படி செயின் பறிக்கும் ஆளாக மாறி, அதுவே பேராசையாக மாறி அவரின் அழிவுக்கு வித்திடுவதை சரியாக விளக்கியுள்ளது.

முக்கிய கதாபாத்திரமாக வரும் பாபி சிம்ஹா, செயின் பறிப்பதிலும் நேர்மையாய் கடைபிடிக்க நினைக்கும் புதுமையான வில்லன். சத்யாவின் பேராசைக்கு அவர் இரையாவது ஜீரணிக்க முடியாதது.. ஜோகனின் பின்னணி இசை படத்தின் திகிலை, த்ரில்லை அதிகப்படுத்துகிறது..

இடைவேளைக்குப்பின் வரும் கதை விஷாலின் பாயும் புலி படத்திலேயே நாம் பார்த்தது என்பதால் புதிய திருப்பத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஒருவித அலுப்பையே தருகிறது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம். க்ரைம் த்ரில்லர் என்கிற வகையில் போரடிக்காத படம் என்பதால் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

Rating:2.5/5