ஜாக்சன் துரை – விமர்சனம்


வியாழன் முடிந்தால் வெள்ளிக்கிழமை வருவது எவ்வளவு உறுதியோ, அந்த அளவுக்கு வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு பேய்ப்படம் ரிலீசாவதும் வாடிக்கையாகிவிட்டது.. இந்த வார பேய்வரவு தான் ‘ஜாக்சன் துரை’.

கிராமத்து பங்களா ஒன்றில் ஜாக்சன் என்கிற பேய் அட்டகாசம் செய்வதாக வந்த புகாரை அடுத்து அங்கே போலீஸ் அதிகாரியான சிபிராஜை அனுப்பி வைக்கிறார்கள். பங்களாவுக்குள் செல்லாமலேயே பட்டும் படாமலும் விசாரிக்கும் சிபிராஜுக்கு, பிந்துமாதவியை திருமணம் செய்வதற்காக அந்த பங்களாவுக்குள் சென்று தங்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

கூடவே பிந்து மாதவியின் முறைமாமன் கருணாகரனும் போட்டிக்கு வர, இருவரும் பங்களாவில் ஏழு நாட்கள் தங்குகிறார்கள். அங்கே ஒன்றல்ல, பல பேய்கள் இருப்பதை உறுதிப்படுவதோடு, அதற்கான காரணமும் தெரியவருகிறது. பேய்களிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

பேய்ப்படங்களின் முக்கிய சாராம்சமே பேய் யார் என்பதற்காக சொல்லப்படும் சுவாரஸ்யமான, வித்தியாசமான பிளாஸ்பேக் தான். அதுதான் மற்ற படங்களில் இருந்து அவற்றை வித்தியாசப்படுத்தி காட்டும். இது அந்தவகையை சேர்ந்த படம் தான். ஆனால் அதை சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்களா..? பார்க்கலாம்.

சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக பில்டப் காட்டும் காட்சிகளை விட, பேய் பங்களாவில் பயந்து நடுங்கும் காட்சிகளே அதிகம் சிரிப்பை வரவழைக்கின்றன… இதுவரை நடித்த படங்களில் இந்தப்படத்தில் காமெடி கலந்த கேரக்டரில் சரியாக செட்டாகி இருக்கிறார் சிபிராஜ். அவருடன் கூடவே கருணாகரனும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். சத்யராஜின் புரட்சி வீரன் அவதாரமும் பேய் அவதாரமும் சூப்பர் என்றாலும் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ரிப்பீட் காட்சிகளால் அவரை நன்றாக வீணடித்திருக்கிறார்கள்.

பிந்துமாதவி வரும் நேரம் குறைவு என்றாலும் அவரும் காட்சிகளில் எல்லாம் கிராமத்துச்சிட்டாக முந்தைய படங்களைவிட அழகாக ஜொலிக்கிறார்.. நடிப்பிலும் கூட. மொட்டை ராஜேந்திரன் (இவரும் பேய் தான்) ‘கேட்டை மூடுடா’ என்கிற வசனத்திற்கு அவ்வளவு கைதட்டல். யோகிபாபுவை இதில் மேக்ஸிமம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.. அவரது கவுன்ட்டர்களும் நிறையவே சிரிக்க வைக்கின்றன.

மொட்டைத்தலை ஜாக்சன் துரையாக வரும் சச்சேரியும் பிரமாதப்படுத்துகிறார். சித்தார்த் விபினின் பின்னணி இசை திகிலூட்டுவதா, சிரிக்கவைப்பதா என நன்றாக குழம்பி இரண்டையும் மாறிமாறி செய்திருக்கிறது.. பேய் பங்களா காட்சிகளில் யுவாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

தரணிதரன் திரைக்கதையில் பெரிதாக சொதப்பி இருக்கிறார். இடைவேளைக்கு பிறகான சம்பவங்கள் அலுப்பையும், சோர்வையும் மட்டுமே தருகின்றன. பேய்களுக்கான பிளாஸ்பேக்கை யாரும் எதிர்பாராத புதிய கோணத்தில் சொன்னதற்காக மட்டும் இயக்குனர் தரணிதரனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கலாம்.