வெளியான நான்கு நாட்களில் வசூலில் சாதனை படைத்த தர்பார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தர்பார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இத்திரைப்படத்தில் நயன்தாரா சுனில் ஷெட்டி யோகி பாபு நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் படம் வெளியான நான்கே நாட்களில் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

தர்பார் திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் இந்தி தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியான திரைப்படம் நான்கு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்ததாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.