கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகளை கொடுத்து உதவினார்.
இந்நிலையில், சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.10 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் சில சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.