காடன் ; விமர்சனம்


காட்டின் பாதுகாவலன் என விருதுவாங்கிய காடன் ராணா, யானைகளையும் அதன் வழித்தடங்களையும் பாதுகாப்பதையே தனது வாழ்நாள் நோக்கமாக வைத்திருக்கிறார். இந்தநிலையில் காட்டின் ஒருபகுதியில் மிகப்பெரிய அளவிற்கு ஸ்மார்ட் சிட்டி கட்டும் முயற்சியில் இறங்குகிறார் மத்திய அமைச்சர் ஆனந்த் பத்மநாபன். அதற்கான பணிகள் துவங்கவே, இதை எதிர்த்து வழக்கு தொடர்கிறார் ராணா. ஆனால் பொய்வழக்கு போட்டு அவர்களை உள்ளே தள்ளுகின்றனர்.. காட்டில் யானைகளை சமாளிக்க கும்கி யானை வைத்திருக்கும் விஷ்ணு விஷாலை அழைத்து வருகின்றனர்.

ராணா சிறையிலிருந்து வருவதற்குள் ஸ்மார்ட் சிட்டிக்கான தடுப்புச்சுவர் கட்டி விடுகின்றனர். யானையின் தடம் மறைக்கப்படுவ்தால் அவை ஊருக்குள் நுழைந்து மனிதர்களை தாக்க ஆரம்பிக்கின்றன. யானைகளுக்கும் அமைச்சரின் அடாவடிக்கும் பயந்து காட்டுபகுதி மக்கள் வேறு இடங்களுக்கு கிளம்புகின்றனர். இந்தநிலையில் பிரதமரை அழைத்து வந்து துவக்க விழா நடத்த தடபுடலான ஏற்பாடுகளை செய்கிறார் ஆனந்த் பத்மநாபன். ராணாவால் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த முடிந்ததா, யானைகளுக்கான நீதி கிடைத்ததா என்பது க்ளைமாக்ஸ்.

காட்டை நம்பி வாழும் பழங்குடி மக்களுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களையும் அரசாங்கத்தையும் எதிர்த்து போராடும் படங்கள் தான் இதுவரை வந்துள்ளன. காட்டில் உள்ள மிருகங்களை, குறிப்பாக யானைகளை பாதுகாக்க, அதன்மூலம் மனித வாழ்வியல் சங்கிலியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளியான முதல் படம் இந்த காடன் ஆகத்தான் இருக்கும்.

காட்டுமனிதர் ஆகவே மாறிவிட்டார் ராணா. உடல்மொழியில் பிதாமகன் விக்ரம் வெளிப்பட்டாலும் அளந்து பேசும் வசனங்கள், யானைகளுக்காக பரிதவிப்பது என பாகுபலியில் பார்த்த ராணாவா இது என நிறைய ஆச்சர்யப்படுத்துகிறார். விஷ்ணு விஷால் கும்கியுடன் வந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவும் தரும் நெகடிவ் கேரக்டர். நிச்சயம் இதில் வித்தியாசமான விஷ்ணுவை பார்க்க முடிகிறது. ஆனால் இவரது பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு ஆளையே காணவில்லை.

கதாநாயகிகளில் ஒருவர் பத்திரிகையாளராக ஹீரோவுக்கு துணை நிற்கும் டெம்ப்ளேட் வேடம்.. ராணாவின் தங்கையாக வரும் இன்னொருவர் கையில் வில் அம்பு, துப்பாக்கி சகிதமாக ஏதோ பூச்சாண்டி காட்டுவது போல பில்டப் மட்டும் கொடுத்துவிட்டு செல்கிறார். பொதுச்சொத்தை ஆக்கிரமிக்கும் வழக்கமான அடாவடி மந்திரி கதாபாத்திரத்தில் இந்தமுறை அப்பாவியான ஆனந்த் பத்மநாபன்.. ஆனால் அடப்பாவி என சொல்ல வைக்கிறார்,

நீண்ட நாளைக்கு பிறகு ஆகாஷை திரையில் நீண்ட நேரம் பார்க்க முடிவது ஆச்சர்யம். விஷ்ணுவின் மாமனாக வரும் தெலுங்கு நடிகரின் காமெடி இங்கே நமக்கு ஒட்டவில்லை.. அதேசமயம் அந்த கேரக்டரில் தம்பி ராமையாவை போட்டிருந்தால் நிச்சயம் கும்கி-2வாக மாறியிருக்கும்..

ராணாவை சிறையில் போட்டுவிட்டு மதில் சுவரை கட்டுகிறார்கள்.. சரி. ராணாவின் தங்கையுடன் ஒரு நக்சல் பட்டாளமே இருக்கிறார்களே, வெறுமனே ராணுவ வீர்கள் அளவுக்கு பில்டப் காட்டுகிறார்களே, தவிர அவர்களால் ஏன் இந்த முயற்சியை தடுக்க முடியவில்லை என்கிற கேள்வி எழுகிறது.. பிரதமர் வருவதற்கு சில நிமிங்டகளுக்கு முன்பு தான் இந்த பிரச்சனை சோஷியல் மீடியா மூலமாக அவருக்கு தெரிய வருவதாக .காட்டுகிறார்கள்.. அதற்கு முந்தைய நாட்களில் அவ்வளவு களேபரம் நடப்பது எப்படி அவர் கண்ணில் படாமல் போகிறது.?.

இப்படி படமாக்கலின்போது திரைக்கதையில் சின்னச்சின லாஜிக் குறைகள் இருந்தபோதும் காட்சிகள் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். அசோக் குமாரின் ஒளிப்பதிவு கானகத்தின் கவர்ச்சியை கண்களுக்கு விருந்தக்குகிறது.

இயற்கை சார்ந்த படங்களையே எடுக்கிறார் என்பதால் பிரபு சாலமன் படங்களுக்கு என தனி மதிப்பும் ரசிகர் வட்டமும் இருக்கிறது.. அப்படி இந்தப்படத்திலும் யானைகளுக்காக தனது குரலை உயர்த்தியுள்ளார். யானைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை உயிரோட்டமாக படமாக்கி இருக்கிறார். அதேசமயம் மூன்று மொழிகளில் இந்தப்படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியதால் திரைக்கதையில் கவனத்தை சிதறவிட்டுள்ளார் என்றே சொல்லாம். அதனாலேயே மைனா, கும்கி போல நம் மனதை இந்தப்படம் தொட மறுக்கிறது.