போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம்


போத்தனூர் தபால் நிலையத்தில் 1990களில் நடக்கும் ஒரு பணத் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். இவரே இந்த் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இரண்டே நாளில் நடக்கும் கதை இது. கம்ப்யூட்டர் தான் எதிர்காலம் என புரிந்துகொண்டு, கம்ப்யூட்டர் பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறார் பிரவீன். ஆனால் வங்கிக் கடன் கிடைக்காமல் ஏமாற்றமடைகிறார்.

பிரவீன் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் ஒரு நேர்மையான போஸ்ட் மாஸ்டர். ஒரு நாள் தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணம், ஏற்கனவே இருக்கும் பணம் என ஆறு லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பில்லை என கருதிப் போஸ்ட் மாஸ்டர் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார். கொண்டு செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ திருடி விடுகிறார்கள்.

திங்கக்கிழமை காலைக்குள் அந்த பணத்தை தபால் நிலையத்தில் வைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டர் மகன் பிரவீன், அவனுடைய நண்பன் வெங்கட் சுந்தர், காதல் அஞ்சலி ராவ் ஆகியோரோடு சேர்ந்து பணத்தை கண்டுபிடிக்க முயல்கிறான். என்ன ஆனது, பணம் கிடைத்ததா என்பதே மீதிக்கதை.

படத்தின் இயக்குனர் – நடிகர் பிரவீன் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தவர். இவரே இந்த படத்திற்கு கலை இயக்குனரும் கூட. நடிப்புக்கு புதுசு என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமாக நடித்து அசத்தியுள்ளார்.

நாயகி அஞ்சலி ராவ் தவிர அனைவரும் புதுமுகங்கள் தான். ஆனால் அனைவரின் நடிப்பும் பிரமாதம்.

படத்தின் கதைக்களம், படமாக்கப்பட்ட விதம் இவை தான் படத்திற்கு பிளஸ் பாய்ன்ட்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் 90களின் காலகட்டத்தை அழகாக நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார்.

படத்தின் முதல்பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இடைவெளிக்கு பின்னர் விறுவிறுப்பாக செல்கிறது.

படத்தில் ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகள் இருப்பதால் நிச்சயம் இந்த படம் நம்மை ரசிக்க வைக்கும்.