திருச்சிற்றம்பலம் ; விமர்சனம்

வாழ்க்கையின் ஓட்டத்தில் எங்கோ ஓர் இடத்தில் நமக்கான மேஜிக் நிகழும் என்பது தான் திருசிற்றம்பலம்.
இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹர் நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ளார். அதன் உற்சாகத்தை நாம் படத்தில் காண முடிகிறது.

தாத்தா பாரதிராஜா, அப்பா பிரகாஷ் ராஜ், பேரன் தனுஷ் இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்தாலும், அப்பா பிரகாஷ் ராஜுக்கும், மகன் தனுஷுக்கும் பத்து வருடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தையே இல்லை. இதற்கு காரணம் தனுஷின் அம்மாவும், தங்கையும் ஒரு விபத்தில் இறந்து போனதே.

தனுஷ் டெலிவெரி பாய் வேலை செய்து வருகிறார். அவரும் கீழ் பிளாட்டில் குடியிருக்கும் நித்யா மேனனும் சிறுவயது நண்பர்கள். மாடர்ன் பெண்ணான ராஷி கண்ணா மீது தனுஷுக்கு காதல், அது நிறைவேறாமல் போகிறது. அடுத்து கிராமத்து பெண்ணான ப்ரியா பவானி ஷங்கர் மீது காதல், அது ஒரே நாளிலே கட் ஆகிறது. நித்யா தான் உனக்கு சரியானவள் என தாத்தா சொல்ல, அதன் பின் நடப்பவை தான் படத்தின் மீதிக்கதை.

படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர்.ஜவஹர்.படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். மொத்த படத்தை தனி ஆளாக தாங்கி பிடிக்கிறார் நித்யா மேனன். தனுஷை ஓவர்டேக் செய்துவிட்டார் என்றே சொல்லலாம். நித்யா போன்ற ஒரு தோழி வேண்டும் என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.

தனுஷ், பக்கத்து வீட்டு பையனாக வந்து நம்மை ரசிக்க வைக்கிறார். தனுஷ் எவ்வளவு வித்தியாசமான படங்கள் நடித்தாலும், அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதைதான்.

ராஷி கண்ணாவும், ப்ரியா பவானி ஷங்கரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். நம் கூடவே இருப்பவர்களின் அருமை நமக்கு தெரியாது என்பார்கள், அதை அழகாக இந்த படத்தில் காட்டியுள்ளனர். ஹிரோயிசம் காட்சிகள் எதுவுமில்லாமல் எதார்த்தமான கதை, நடிப்பு என நம்மை ரசிக்க வைக்கிறான் திருசிற்றம்பலம்.

தாத்தாவாக பாரதிராஜா அசத்தியிருக்கிறார். அவருக்கும் தனுஷுக்குமான காட்சிகள் மறுபடியும் மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற சந்தோசத்தை நமக்கு கொடுக்கிறது. பிரகாஷ் ராஜ் பல படங்களில் பார்த்த அப்பா வேடம் என்றாலும், அவரின் எதார்த்த நடிப்பால் நம்மை கட்டிப்போடுகிறார்.

நகைச்சுவைக்கு என்று தனியாக யாருமில்லை, முக்கிய கதாப்பாத்திரங்களே டைமிங் காமெடியில் அசத்தி விட்டார்கள்.

அனிருத் – தனுஷ் கூட்டணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிக்கும் படியாக உள்ளது.

ஆபாசம் இல்லாத எதார்த்த காதல் கதை, குடும்பத்தோடு பார்க்கலாம்.