ஜீவி 2 ; விமர்சனம்

2019-ல் தியேட்டரில் வெளியான ஜீவி படம் அதன் வித்தியாசமான கதை – திரைக்கதைகாக கவனிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

ஜீவி முதல் பாகத்தில் சில காட்சிகளை காண்பித்து அதை ரிவைண்ட் செய்தபடி தொடங்குகிறது கதை. திருமணம் முடிந்து மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் வெற்றி. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவர் கார் வாங்குகிறார். நண்பன் கருணாகரனுக்கு டீ கடை வைத்து தருகிறார். அந்த நேரத்தில் அவரது மனைவிக்கு கண் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை வருகிறது.

பண நெருக்கடி, குடும்பம், வேலை என சிக்கல்கள் அடுக்க மீண்டும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். இதற்காக தன் நண்பர் முசாபிர் வீட்டிலையே திருட நினைக்கிறார் வெற்றி. இப்படியாக தொடரும் சிக்கல்களை எப்படி சமாளிக்கிறார், தொடர்பியல் விதியின் கோரத்தாண்டவத்திலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

முதல் பாகம் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் இருக்கும், ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் நாம் அதை எதிர்பாக்க கூடாது.

வெற்றி, கருணாகரன், ரோஹினி, மைம் கோபி ஆகியோர் முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

தொடர்பியல் என்பது முதல் பாகத்தில் அதன் போக்கிலேயே போகும். அதைச் சுற்றி திரைக்கதை அமைத்தது போல இருக்கும். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்பியலைக் காட்ட வேண்டும் என்பதற்காக திரைக்கதையை எங்கெங்கோ அலைய விட்டிருக்கிறார்கள். முதல் பாகம் போல இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.