வத்திகுச்சி படத்தை இயக்கிய பி.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ஜமுனா.
முன்னாள் எம்எல்ஏ ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டும் கூலிப்படை கும்பலின் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் அவர்கள் வாடகைக் கார் ஒன்றை புக் செய்கிறார்கள். அந்தக் காரை ஓட்டி வரும் ஜமுனாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவர்கள் மீது சந்தேகம் துளிர்விடுகிறது.
ஆரம்பத்தில் மறுக்கும் ஜமுனா, வேறு வழியில்லாமல் அவர்களை காரில் ஏற்றிக்கொள்கிறார். வழியில் அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வர, அடுத்து என்ன நடந்தது? முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்டாரா? அதன் பின்னணி என்ன? – இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் ‘டிரைவர் ஜமுனா’.
சாதாரண பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்திற்கு மிக அழகாக தன்னை பொருத்திக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை சீட் நுனிக்கு இழுத்து வருகிறார். கிளைமாக்சில் காரை கவிழ்த்து விஸ்வரூபம் எடுக்கிறார்.
அரசியல்வாதியாக வரும் ஆடுகளம் நரேன் நிறுத்தி நிதானமாக தன் ஆட்டத்தை ஆடி குரூரம் காட்டுகிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக்குமார், கவிதா பாரதி, இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் இயல்பான நடிப்பால் தங்கள் கதாபாத்திரத்தை மிளிரச் செய்கிறார்கள்.
ஜிப்ரானின் பின்னணி இசையும், கோகுலின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகந்தாலும் போகப்போக வேகம் எடுக்கிறது. எளியோரை வலியோர் வீழ்த்தும்போது, எளியோராலும் வலியோரை வீழ்த்த முடியும் என்ற ஒற்றை வரி கதையை சஸ்பென்ஸ், ஆக்ஷன் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின்.