தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது இந்த குட் நைட் திரைப்படம். அப்படி என்ன அந்த புதிய கதைக்களம்? அது ரசிகர்களை ஈர்த்ததா, இல்லையா? பார்க்கலாம்.
ஐடி-யில் பணியாற்றும் மோகனுக்கு (மணிகண்டன்), குறட்டைதீராத பிரச்சினையாக இருக்கிறது. இதனால், காதலும் கைவிட்டுப் போகிறது. மோகனின் அக்கா (ரேச்செல் ரெபெக்கா) கணவர், ரமேஷ் (ரமேஷ் திலக்), வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியைப் பொருத்தும் வேலை பார்க்கிறார்.
அப்படி அவர் செல்லும் வீட்டின் மாடியில் பெற்றோரை இழந்த அனு(மீதா ரகுநாத்), தனியாக வசிக்கிறார். ரமேஷுடன் அந்த வீட்டுக்குச் செல்லும் மோகனும் அனுவும் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள். மோகனின் குறட்டையால் தூக்கம் இழக்கும் அனுவுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. குற்ற உணர்வால், தனது குறட்டை சரியாகும் வரை தனி அறையில் தூங்குகிறார் மோகன் . இதையடுத்து நடக்கும் விஷயங்கள் இருவர்உறவிலும் விரிசலை ஏற்படுத்துகின்றன. இறுதியில் குறட்டைப் பிரச்சினை தீர்ந்ததா? இருவரும் திருமண வாழ்வை நிம்மதியாகத் தொடர்ந்தார்களா என்பது மீதிக் கதை.
குறட்டையை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான ‘ஃபீல்குட்’ படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். தேவையில்லாத இடத்தில் வரும் திணிக்கப்பட்ட காமெடி காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என எதுவுமே இந்த படத்தில் இல்லாமல் போகிற போக்கில் எதார்த்தமான ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தை கொடுத்து கவனிக்கத்தக்க இயக்குநர்களின் வரிசையில் தானும் ஒருவர் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விநாயகர் சந்திரசேகரன்.
கொஞ்சம் கூட முகத்தில் நடிப்பே தெரியாத அளவிற்கு மிகவும் யதார்த்தமான நடிப்பை மிகத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் மணிகண்டன். கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சின்ன சின்ன இடங்களில் கூட முக பாவனைகள் மூலமும் ஆன்லைன் வசனங்கள் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்து ஈர்த்திருக்கிறார். இவருக்கும் ரமேஷ் திலக்குக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நாயகி மீதா ரகுநாத் மேக்கப் இன்றி அழகாக இருக்கிறார், அளவாக பேசுகிறார், நிறைவாக நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி புரிந்துள்ளது. எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசனம் தேவைப்படுகிறது அதை சுருக்கமாக பேசி அதற்குள்ளேயே பாசம், நேசம், கோபம் ஆகியவற்றை அழகாக கடத்தி தேர்ந்த நடிகையாக திகழ்ந்துள்ளார்.
அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் அதே நேரத்தில் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத நாயகியாக மீதா ரகுநாத் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.
ரேச்செல் ரெபெக்கா, ரமேஷ்திலக், நாயகியின் வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அவர் மனைவியாக நடித்திருப்பவர் என அனைவரும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கான உணர்வைக் கச்சிதமாகக் கடத்துகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் கதையின் ‘ஃபீல்குட்’ தன்மைக்குத் துணைபுரிந்திருக்கின்றன.
மொத்தத்தில் குட் நைட் அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.