ஆரவ், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், நடிப்பில் தயாளன் பத்மநாபன் உருவாகி உள்ள படம் மாருதிநகர் காவல் நிலையம்.
இரவில் பணி முடிந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான்.
அவனுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த நண்பர்கள், இந்த மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவாரசியத்தைக் கடைசி வரை தக்க வைத்துள்ளார் தயாள் பத்மனாபன்.
காவல்துறை அதிகாரியாக வரலெஷ்மி சரத்குமார். அதிர்ச்சி, ஆவேசம், நிதானம், பயம் என உணர்வுகள் பலவற்றையும் பரிமாறும்படியான பாத்திரம். ஆரவ், அமித் பார்கவ் இருவரது நெகுநெகு உயரம் அவர்கள் ஏற்றுள்ள காவல்துறை உயரதிகாரி பாத்திரத்துக்கு பொருந்திப்போக, நடிப்புப் பங்களிப்பிலும் தேவையான கம்பீரம் காட்டியிருக்கிறார்கள்! நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால், தாதாவாக சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரின் அளவான நடிப்பும் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதையின் பெரும்பகுதி ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே நடந்தாலும் சலிப்பு தராத திரைக்கதையால் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.
கன்னடத்தில் 21 படங்கள் இயக்கியுள்ள தயாள் பத்மனாபன், தனது முதல் தமிழ்ப்படமாக, வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப் நடித்த ‘கொன்றால் பாவம் எனும் படத்தை இயக்கியிருந்தார். இதே வருடத்தில், அவர் இயக்கத்தில் தமிழில் வெளியாகியுள்ள இரண்டாவது படமிது.
மொத்தத்தில் ஒரு அருமையான விறுவிறுப்பான படத்தை கம்மியான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளார்கள்.