இயக்குனர் ராஜகுருசாமி இயக்கத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடப்புறா கலைக்குழு.
கிராமங்களில் அழிந்து வரும் கரகாட்ட கலை பற்றியும் அதை வாழ்வாதாரமாக உயிர் மூச்சாக கொண்டு வாழும் மனிதர்களின் சுக துக்கங்கள் பற்றியும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த காடப்புறா கலைக்குழு. முனீஸ்காந்த் இந்த படத்தின் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
கிராமத்தில் காடப்புறா கலைக்குழு என்கிற பெயரில் ஊர் திருவிழாக்கள் விசேஷங்களுக்கு கச்சேரிக்கு சென்று வருகிறார் முனீஸ்காந்த். அவருக்கு கீழே காளி வெங்கட், மெட்ராஸ் ஜானி ஹரி கிருஷ்ணா உள்ளிட்ட குழுவினர் இருக்கின்றனர். இவர்களுக்காகவே திருமணம் செய்யாமல் கலையை மட்டுமே கவனத்தில் கொண்டு நடத்தி வருகிறார் முனீஸ்காந்த்.
அவரது வளர்ப்பு தம்பி ஆன ஹரி கிருஷ்ணன் அந்த ஊரில் அவர்களுக்கு எதிரான இன்னொரு பாடகரின் தங்கையான சுவாதி முத்துவை காதலிக்கிறார். இதை விரும்பாத அண்ணன் அந்த ஊரை சேர்ந்த தலைவர் மைம் கோபியிடம் முறையிட அவரையும் மீறி இவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறார் முனீஸ்காந்த்.
ஒரு கட்டத்தில் முனீஸ்காந்த்திற்கு தானாகவே ஒரு வரன் தேடி வருகிறது ஆனால் தனது தேர்தல் தோல்விக்கு முனீஸ்காந்த் தான் காரணம் என நினைக்கும் மைம் கோபி அவரை போட்டுத் தள்ள முடிவு செய்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது மீதி கதை.
நகைச்சுவை வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த முனீஷ்காந்துக்கு இந்தப்படத்தில் கதையின் நாயகனாகப் பதவி உயர்வு.அவரும் அதற்கேற்ப நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். ஒரு கலைஞனாக தானும் பெயர்பெற்று தன் குழுவையும் பாதுகாக்கும் அவருடைய பொறுப்பு நெகிழ்வு.
காளிவெங்கட்டுக்கும் முக்கிய கதாபாத்திரம். வழக்கம் போல அதைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
ஸ்ரீலேகா ராசேந்திரன், சூப்பர்குட் சுப்பிரமணி, ஆதங்குடி இளையராஜா மற்றும் வில்லனாக வரும் மைம்கோபி ஆகியோர் அவரவர் வேலையைச் சரியாகச் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
வினோத்காந்தியின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாக அமைந்திருக்கிறது. கிராமியக் கலைகளுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் காட்சிகள் அமைந்திருக்கின்றன.
இசையமைப்பாளர் ஹென்றியின் இசை படத்திற்கு பலம். கிராமியக்கலைஞர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு அவர்களின் அவலங்களையும் பெருமைகளையும் பேசுபொருளாக்கியிருக்கும் இயக்குநர் ராஜாகுருசாமி, எல்லாவற்றையும் நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்.