திரு மாணிக்கம் ; விமர்சனம்

ஒரு மனிதன் இந்த சமூகத்தில் நேர்மையாக இருந்தாலே அவனை பிழைக்கத் தெரியாதவன் என்று முத்திரைக் குத்துகிறது. அப்படி முத்திரைக் குத்தப்படும் ஒரு நேர்மையாளனின் கதை தான் இந்த மாணிக்கம்.

கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். பொருளாதார பிரச்சினைகள் உண்டு என்றால், அனைவரிடத்திலும் அன்பைச் செலுத்தி மன நிறைவாகவே வாழ்கிறார்.

ஒரு நாள் இவருடைய கடைக்கு வரும் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்குகிறார். அவரிடம் பணம் இல்லாததால் அவரது சீட்டை எடுத்து வைக்க சொல்லிச் செல்கிறார். கடைசியில் அந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி பணம் கிடைக்கிறது. பாரதிராஜாவிடம் கொண்டு சேர்க்க சமுத்திரக்கனி புறப்படுகிறார்.

ஆனால் மனைவி உறவினர்கள் அந்த பணத்தை நாமே வைத்துக் கொள்ளலாம் என வற்புறுத்துகின்றனர். இந்த சோதனையில் சமுத்திரக்கனியின் நேர்மை வென்றதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.,

வழக்கம் போல் நேர்மையின் சிகரமாக வந்து நிற்கிறார் சமுத்திரக்கனி. மாணிக்கம் எப்படி திரு. மாணிக்கமாக உயர்ந்தார் என்பதை தனது கேரக்டர் மூலமாக கொண்டு வந்து நிறுத்திவிட்டார் கதையின் ஹீரோ சமுத்திரக்கனி

நடுத்தர குடும்பத்து மனைவியாக மாணிக்கத்துக்கு கிடைத்த வைரமாக நடிப்பில் கொடி கட்டி இருக்கிறார் அனன்யா.

முக்கியமான கதாப்பாத்திரங்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு.. ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. பின்னணி இசையும் அளவு.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா கண்கள் கேரள பகுதிகளை எதார்த்தமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, எளிமையானவர்களின் சோகம் மற்றும் கண்ணீரை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

லாட்டரி டிக்கெட், பரிசு, நேர்மை, அதன் மூலம் எழும் பிரச்சனைகள் ஆகியவற்றை நாம் ஏற்கனவே சில படங்களில் பார்த்திருந்தாலும், அதை வேறு ஒரு பாணியில் சொல்ல முயற்சித்திருக்கும் நந்த பெரியசாமி விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திச் சென்றிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.