சமீப காலமாக சந்தானத்தின் படங்கள் அவரது ரசிகர்களை என்கிற ஒரு குறை ரசிகர்களுக்கு விருந்து வருகிறது அந்த வகையில் தற்போது சந்தானம் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகி உள்ள படம் இது. வெற்றிக்கான அம்சங்கள் இந்த படத்திலும் இருக்கிறதா ? பார்க்கலாம்.
சந்தானமும் சுரபியும் காதலர்கள். சுரபியின் சகோதரி தனது திருமணத்தின்போது ஓடிப்போய்விட அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் ரெடின் கிங்ஸ்லி குடும்பம், தாங்கள் செலவு செய்த 25 லட்சம் ரூபாயை திருப்பித் தர கேட்கிறது. இந்த நேரத்தில் மொட்ட ராஜேந்திரன் மற்றும் பிபின் என இரண்டு குரூப்புகள் ரெடின் கிங்ஸ்லியின் தந்தையான பெப்சி விஜயன் வீட்டில் இருந்து திருடிய பணம் எதிர்பாராத விதமாக சந்தானத்தின் கைகளுக்கு வருகிறது.
அதில் கொஞ்சம் பணத்தை கொடுத்து சுரபியின் பிரச்சினையை முடிக்கிறார் சந்தானம். ஆனால் அந்த பணம் தன் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் தான் என பெப்சி விஜயனுக்கு தெரிய வருகிறது. சுரபியை பிடித்து வைத்துக்கொண்டு பணத்தைக் கொண்டு வரும்படி சந்தானத்தை மிரட்டுகிறார்.
ஆனால் சந்தானத்தின் நண்பர்கள் அந்த பணத்தை ஒரு பேய் பங்களாவில் ஒளித்து வைத்துள்ளனர். அதை எடுக்கச் செல்லும் போது அந்த பங்களாவில் இருக்கும் பேய்களிடம் சிக்கிக் கொள்கிறார் சந்தானம். ஒரு காலத்தில் வித்தியாசமான விளையாட்டுக்களை நடத்தி அதன் மூலம் எதிர்ப்பை சம்பாதித்து கொடூரமான முறையில் இறந்து போன அந்த பேய் குடும்பம் சந்தானம் உள்ளிட்டோருக்கு விளையாட்டுப் போட்டிகளை வைக்கிறது.
இதில் ஜெயித்தால் பல மடங்கு பணத்தோடும் உயிரோடும் வெளியே போகலாம், இல்லையென்றால் மரணம் தான் என கண்டிஷன் போட்டு ஆட்டத்தை துவங்குகிறார்கள். இதில் சந்தானம் அன் கோ எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதுதான் மீதி படம்.
சந்தானத்தின் படத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கின்றன. கடந்த இரண்டு படங்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு கட்ட தவறிய சந்தானம் அதற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை விடாமல் சிரிப்பதற்கு பலம் உள்ளவர்கள் தைரியமாக இந்த படத்திற்கு வரலாம். அந்த அளவிற்கு சந்தானம் அன் கோ நகைச்சுவையில் நம் வயிற்றை பதம் பார்த்து விடுகிறார்கள்.
சந்தானம் தான் மட்டும் நகைச்சுவை காட்சிகளில் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளாமல் தனது சகாக்களான மாறன், சேஷு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், தங்கதுரை, சாய் தீனா, பிபின், முனீஸ்காந்த் என எல்லோருக்கும் சம வாய்ப்பை வழங்கியுள்ளார். அனைவருமே கிடைத்த இடத்தில் எல்லாம் காமெடியில் ஸ்கோர் செய்கிறார்கள்.
இந்த படத்தில் பேய்க்கூட்டமாக வரும் பிரதீப் ராவேத், மாசூம் சங்கர் உள்ளிட்டோரும் இந்த படத்தின் விறுவிறுப்பை கூட்டி உள்ளார்கள். குறிப்பாக எப்போதுமே சரியாக ரூல்ஸை கடைபிடிக்க வேண்டும் என நினைக்கும் பிரதீப் கதாபாத்திரமும் வித்தியாசமானது தான்.
ஒரு இடத்தில் இருக்கும் பணம் ஒவ்வொரு நபருக்கு விதவிதமாக கை மாறுவதும் அதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளையும் இடைவேளைக்கு முன்பு கலாட்டாவாக சொன்ன இயக்குனர் பிரேம் ஆனந்த், இடைவேளைக்குப் பிறகு பேய் பங்களாவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை படமாக்கி இருப்பது காமெடியின் உச்சம்.
நிச்சயம் படம் பார்ப்பவர்கள் இன்னொரு முறை இந்த படத்தை பார்க்க வேண்டும் என தியேட்டர் பக்கம் திரும்புவார்கள். அந்த அளவிற்கு டிடி ரிட்டன்ஸ் சந்தானத்தின் வெற்றியை உறுதி செய்து இருக்கிறது.