எல்ஜிஎம் ; விமர்சனம்

நட்சத்திர கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய அணி கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தயாரிப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள படம் தான் இந்த எல் ஜி எம் தமிழில் தன் முதல் அடியை எடுத்து வைத்துள்ள எம் எஸ் தோனி முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்திருக்கிறாரா இல்லை சிங்கிள் ரன் தட்டி இருக்கிறாரா பார்க்கலாம்

ஹரிஷ் கல்யாண், இவானா இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும் அக்ரிமெண்ட் போட்டு இரண்டு வருடம் காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பின்னர் தங்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார் இவானா. அதேபோல திருமணத்திற்கு இருவீட்டாரும் ஒப்புக்கொண்டாலும் திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்த செல்ல வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார் இவானா.

ஆனால் தன்னை தனியாளாக வளர்த்து ஆளாக்கிய அம்மா நதியாவை தனியாக விட்டு வர விரும்பாத ஹரிஷ் கல்யாண் இந்த திருமணமே வேண்டாம் என்கிறார். ஆனாலும் காதலர்கள் தங்களது காதலை விட தயாராக இல்லை. இதனால் இவானா, எப்படி காதலுக்கு முன் நாம் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோமோ அதுபோல திருமணத்திற்கு முன்பாக நதியாவிடம் பழகி அவரைப் பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்.

இதற்கு ஒப்புக்கொண்ட ஹரிஷ் கல்யாண் அம்மாவிடம் பொய் சொல்லி இரண்டு குடும்பத்தினரும் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்கிறார். சென்ற இடத்திலும் தனது அம்மாவிடம் இவானா நெருங்கி பழக முடியாதபடி ஏற்பாடுகளை செய்கிறார் ஹரிஷ் கல்யாண்.

ஆனால் மறுநாளே நதியாவும் இவானாவும் அதிரடியாக முடிவு எடுத்து தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஊருக்கு அனுப்பிவிட்டு நாங்கள் இருவர் மட்டும் தனியாக புது சுற்றுலா கிளம்புகிறார்கள். இதற்குப் பிறகு என்ன நடந்தது, இருவருக்கும் புரிதல் ஏற்பட்டதா, இல்லை பிளவு ஏற்பட்டதா என்பது மீதிக்கதை.

இவானாவின் காதலனாக, நதியாவின் மகனாக யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பத்தில் சிக்கி தவிக்கும் இன்றைய இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறியுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

லவ் டுடே படத்தில் காதலித்தாலும் வேறு விதமான மனக்குழப்பத்தில் சிக்கித் தவித்த இவானா இந்த படத்தில் அதே காதலில் வேறு விதமான குழப்பத்தில் சிக்கி இன்றைய இளம் பெண்களின் பல்வேறு விதமான மனநிலைகளை அழகாக பிரதிபலித்துள்ளார். தனக்கு சரி என்று பட்டதை சட்டேன்று சொல்லும் பெண்ணாக, மாமியாரை புரிந்து கொள்ள மெனக்கெடும் மருமகளாக, மாமியாரின் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் காட்டும் ஈடுபாடு, மீராவாக படம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிக்கிறார்.

நதியாவின் ஆர்ப்பரிக்கும் நடிப்பு முதல் பாதியில் கம்பீரத்துடன் பிரதிபலிக்க, இரண்டாம் பாதி இளமை துள்ளலுடன் ஆட்டம், பாட்டம் என்று அதகளம் பண்ணியுள்ளார். மகனுக்காக தன் இன்ப துன்பங்களை பறி கொடுத்த தாயாக வாழ்ந்திருக்கிறார்.

இவானாவும் நதியாவும் தான் படத்தின் மொத்த பலமும். இவர்களின் கூட்டணி படத்திற்கு ப்ளஸ்ஸாக விளங்கியுள்ளது. யோகி பாபு வண்டி ஒட்டுனராக பஞ்ச் வசனம் பேசி தனக்குரிய பங்களிப்பால் கலகலக்க வைத்துள்ளார்.

நண்பராக ஆர்ஜே விஜய் அறிவுரை செய்து கொண்டே நண்பனுக்கு உதவிகள் செய்து காமெடி கலந்த பேச்சாற்றலால் கவனிக்க வைக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், விநோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக சில காட்சிகள் வந்து செல்கின்றனர்.

முதல் பாதி படத்தை ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் கலந்து கொண்டு சென்ற இடைவேளையில் ஒரு அருமையான திருப்பத்தை கொடுத்த இயக்குனர் இரண்டாம் பாதியில் அதை சரியான பாதையில் கொண்டு செல்ல தடுமாறி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

நதியா இவானா இருவருக்குமான புரிதல் ஏற்படும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சென்டிமென்டாக வைத்திருந்தால் படம் உணர்வுபூர்வமாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாங்க பழகி பார்க்கலாம் என்கிற ரீதியில் ஒரு வருங்கால மருமகளுக்கும் மாமியாருக்கும் புரிதலை உருவாக்கும் விதமாக வித்தியாசமான கதை கருவை யோசித்ததற்காகவே இயக்குனர் ரமேஷ் தமிழ் மணியை தாராளமாக பாராட்டலாம்