நல்ல கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் வெற்றியின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ரெட் சாண்டல்வுட். இதற்கு முன் ஜீவி, பம்பர் ஆகிய படங்களில் வரவேற்பையும் ஓரளவு வெற்றியையும் பெற்ற வெற்றிக்கு இந்த ரெட் சாண்டல் கை கொடுக்குமா ? பார்க்கலாம்.
தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு வேலைக்குச் சென்ற தனது மாமன் மகன் விஷ்வந்த்தை தேடி ஆந்திரா செல்கிறார் வெற்றி. விஸ்வந்த் பற்றி விசாரிக்க சில எதிர்பாராத மர்ம தாக்குதலுக்கு ஆளாகிறார். அதிலிருந்து தப்பி ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு செல்வதற்காக வழியில் எதிர்ப்படும் நண்பனின் லாரியில் ஏறுகிறார்.
ஆனால் அந்த நண்பர்கள் செம்மரம் கடத்தி வந்ததாக போலீசார் கைது செய்ய வெற்றியும் தேவையில்லாமல் அதில் மாட்டிக் ள்கிறார். காவல் நிலையத்தில் இவர்களைப் போலவே எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சிலர் இதேபோல சிக்கி இருக்கின்றனர். போலீசார் அவர்களை தப்பிக்க விடுவது போல ஓட சொல்லிவிட்டு பின்னாலேயே துரத்தி ஒவ்வொருவராக சுட்டுக் கொள்கின்றனர்.
இந்த தாக்குதலில் தப்பிக்கும் வெற்றி தன்னை துரத்துபவர்களுக்கு தண்ணி காட்டி பதுங்குகிறார். இந்த கடத்தலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எதற்காக இந்த என்கவுண்டர் என ஆராய்கிறார். இதன் பின்னணியில் பிரபல செம்மர கடத்தல் வில்லன் கருடா ராம் இருப்பது தெரிய வருகிறது. அவருக்கு போலீஸ் உடந்தையாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் நல்ல போலீஸ் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராம் தப்பிப்போன வெற்றி உள்ளிட்டவர்களை வெறியுடன் தேடி வருகிறார். வெற்றி போலீசின் கைகளில் சிக்கினாரா ? இல்லை வில்லனிடம் மாட்டினாரா ? இல்லை தப்பு செய்பவர்களை தண்டித்து தனது நண்பனை மீட்டாரா என்பது விறுவிறுப்பான மீதிக்கதை.
ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்றார்கள் எனக் கூறி 20 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரால் சுடப்பட்ட சம்பவத்தின் வடு இன்னும் மறையவில்லை. அதேபோல இப்படி ஒரு சம்பவத்தை மையப்படுத்தி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் ஏற்படுத்திய தாக்கமும் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் அதே கதைக்களத்தில் இதன் ஆழமான பின்னணியை அலசும் விதமாக இந்த ரெட் சாண்டல்வுட் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
கூடவே வெளிமாநிலத்திற்கு செல்லும்போது உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் சொல்லிவிட்டு சென்றால் அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதையும் கதையோட்டத்துடன் கூறி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
வெற்றிக்கு இந்த கதாபாத்திரம் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் இது போன்ற சராசரி மனிதர்களின் கதாபாத்திரங்களாகவே அவர் எல்லா படங்களிலும் மாறி விடுகிறார். அதே போலத்தான் இந்த படத்திலும். தனக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்தும் கூட தன்னுடன் இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும், தனது மாமன் மகனையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் ரிஸ்க்கில் மாட்டிக் கொள்ளும்போது பரிதாபத்திற்கு பதிலாக அவர் மீது கோபத்தையே வரவழைக்கிறார். அதே சமயம் வில்லன்களை மடக்குவதற்காக இறுதியில் அவர் எடுக்கும் அஸ்திரம் பலே என சொல்ல வைக்கிறது.
வெற்றியின் மாமன் மகளாக வரும் நாயகிக்கு பள்ளிக்கூட மாணவியாக ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் அவருக்கும் வெற்றிக்குமான அந்த காதல் நிச்சயமாக ரசிக்கும்படியாக இருக்கிறது. அதேசமயம் அதை ஓவர் டோஸ் ஆக நீட்டிக்காமல் ஒன்னே முக்கால் மணி நேரத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
செம்மரக்கடத்தில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைப்போமா என ஏங்கும் கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த் இருவரும் மிகச்சரியாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர், நேர்மையான போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம், நீண்ட நாளைக்கு பிறகு துறுதுறு நடிப்பில் மிரட்டுகிறார். மிரட்டல் வில்லனாக கருடா ராமும் பொருத்தமான தேர்வே.
இயக்குனர் குரு ராமானுஜம் தான் எடுத்துக்கொண்ட கதையை கவனம் பிசகாமல் சொல்லவேண்டும் என்பதற்காக எந்த ஒரு மசாலா ஐட்டத்தையும் உள்ளே திணிக்காமல் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் இந்த ஜில்லிட வைக்கும் கதையை பகீர் தருணங்களுடன் கடத்துகிறது.
இந்த படத்தில் இயக்குனர் சொல்லி இருக்கும் ஒரு புதிய விஷயம், அதனால் ஹீரோவின் உயிரே காப்பாற்றப்படுவது உள்ளிட்ட சில விஷயங்கள், அட இது புதுசா இருக்கே என சொல்ல வைக்கிறது. புஷ்பா பார்த்து ரசித்தவர்கள் கூட இந்த படத்திற்கு சென்றால் நிச்சயம் அவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.