மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி ; விமர்சனம்


அனுஷ்கா நடிப்பில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு வெளியாகி உள்ள படம் இது. தெலுங்கில் உருவான இந்த படத்தை அப்படியே தமிழுக்கு மாற்றி இருக்கிறார்கள்.

தந்தை இல்லாமல் தாயின் வளர்ப்பில் வெளிநாட்டில் வளரும் அனுஷ்கா நாசர் நடத்தி வரும் ஹோட்டலில் சீப் செப்பாக இருக்கிறார். அம்மா திருமணத்திற்கு எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்தின் மீதான கசப்பான எண்ணத்தால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார் அனுஷ்கா. ஒரு கட்டத்தில் அம்மா சொந்த ஊருக்கு கிளம்புகிறேன் என சென்னைக்கு கிளம்ப, அம்மாவை தனியே விட மனமில்லாமல் தானும் கிளம்பி வருகிறார் அனுஷ்கா.

வந்த சில நாட்களிலேயே அம்மா மரணத்தை தழுவ தனியாளாக உணர்கிறார் அனுஷ்கா. அதற்கு தீர்வு காணும் விதமாக திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்திற்கு வருகிறார். இதற்காக தனது தோழியுடன் சேர்ந்து நல்ல குணமுள்ள ஒரு ஆண்மகனை ஸ்பெர்ம் டோனராக தேர்வு செய்ய நினைக்கிறார். அப்படி ஐடியில் வேலை பார்த்துக்கொண்டே ஸ்டான்ட் அப் காமெடியில் கலக்கி வரும் நவீன் பாலிஷெட்டியின் குணநலன்கள் அனுஷ்காவுக்கு பிடித்துப்போக, அவரிடம் நட்பாகி ஒவ்வொரு விஷயமாக அவர் அறியாமலேயே சோதித்து அவரை ஸ்பெர்ம் டொனேட் பண்ண தயார் செய்கிறார்.

ஆனால் இந்த சந்திப்புகளில் அனுஷ்கா மீது காதலாகிறார் நவீன் பாலிஷெட்டி. அதையடுத்து அனுஷ்கா, தான் இந்த விஷயத்திற்காக தான் அவரை அணுகினேன் என்று கூற வேறு வழியின்றி நிவின் பாலிஷெட்டி, அனுஷ்காவின் எண்ணத்தை நிறைவேற்றுகிறார். கர்ப்பமாகும் அனுஷ்கா வெளிநாட்டிற்கு கிளம்பி செல்கிறார். இதன்பிறகு அனுஷ்காவின் மனம் மாறியதா, இல்லை நிவின் பாலிஷெட்டியின் மனம் அனுஷ்காவின் பிரிவை ஏற்றுக்கொண்டதா ? இருவரும் எந்த முடிவெடுத்தார்கள் என்பது மீதிக்கதை.

கொஞ்சம் கவனம் பிசையினாலும் வேறு விதமான அர்த்தம் வந்து விடக்கூடிய அபாயம். இந்தப்படத்தின் கதையில் இருக்கிறது. இருந்தாலும் அதை சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார்கள். வாடகைத்தாய் முறையில் சமீபத்தில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நடிகை ஒருவர் இரட்டைக்குழந்தை பெற்றுக்கொண்ட பின்பு இதெல்லாம் சாதாரண விஷயம்ப்பா என்று மாறிவிட்டதால் இந்த படத்தில் அனுஷ்காவின் தேடலும் நமக்கு பெரிய அளவில் ஆச்சரியத்தை தராமல் அதை இயல்பாகவே எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்காவை பார்க்கும்போது அதே அழகுடன் பளிச்சிட்டாலும் ஏதோ ஒன்று அவரிடம் மிஸ் ஆவது போன்று ஒரு உணர்வு ஏற்படாமல் இல்லை.

அதேபோல நாயகன் நவீன் பாலிஷெட்டி. இந்த காலத்து துறுதுறு இளைஞனின் மனநிலையை அப்படியே 100 சதவீதம் பிரதிபலிக்கிறார். அவரது பெற்றோராக நடித்திருக்கும் முரளி சர்மா, துளசி ஜோடி, கொஞ்ச நேரமே வந்தாலும் அனுஷ்காவின் அம்மாவாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ஜெயசுதா, நவீன் பாலிஷெட்டியின் நண்பன், அனுஷ்காவின் தோழி என எல்லோருமே இந்த கதையை கலகலப்பாக நகர்த்தி செல்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

ஆனாலும் மொத்த படமும் இந்த ஒரு விஷயத்தையே மையப்படுத்தி வீடு, மருத்துவமனை, ஹோட்டல் என சுத்தி சுற்றி வருவதால் கொஞ்சம் அலுப்பு தட்டுவதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இடைவேளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமாக கதையை நகர்த்திச்சென்று சரியான முடிவை கொடுத்துள்ளார் இயக்குனர் மகேஷ்பாபு. அனுஷ்காவை பார்ப்பதற்காகவே இந்த படத்திற்கு ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்பதால் நாம் தனியாக சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் இல்லை