பொன்னியின் செல்வன்-2, இறுகப்பற்று படங்களில் கிடைத்த நல்ல பெயரை இதிலும் விக்ரம் பிரபு இறுகப்பற்றி இருக்கிறாரா ? பார்க்கலாம்..
சிவராஜ்குமார் நடித்து, கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, ‘டகரு’ படத்தின் ரீமேக் தான் இந்த ரெய்டு. ஆதரவற்ற இன்ஸ்பெக்டர், கொடூரமான தாதாக்கள் மற்றும் ரவுடிகள் (ரிஷி ரித்விக், டேனி போப்). அவர்களின் குற்றங்களுக்கு தண்டிக முயலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ( விக்ரம் பிரபு) அவருக்கு அமையும் ஒரு பக்குவமான காதலி ஸ்ரீ திவ்யா.
விக்ரம் பிரபுவுக்கும், ஸ்ரீதிவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட உள்ள நிலையில், ஸ்ரீதிவ்யா ரௌடிகளால் கொல்லப்படுகிறார். இதனால், அந்த ரௌடிகளின் மொத்தக் கூட்டத்தினையும், விக்ரம் பிரபு கொன்று குவிப்பதே, ரெய்டு படத்தின் கதை.
விக்ரம் பிரபுவை பொருத்தவரை, அவரால் இந்தக் கதைக்கு, என்ன செய்ய முடியுமோ, அதை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த ஶ்ரீதிவ்யாவை, மீண்டும் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி. ஸ்ரீதிவ்யாவின் அந்தக் காதல் பிளாஷ்பேக் அதில் அவரின் நடிப்பு , சாம் சி எஸ் இசையில் அந்தப் பாடல் என்று அந்தப்பகுதி அழகியலுடன் படமாக்கப்பட்டுள்ளது.
வில்லனாக ரிஷி ரித்விக். சாரயம் குடிப்பது, புகை பிடிப்பது கண்களை உருட்டுவது மட்டுமே வில்லத்தனம் என்று நினைத்திருக்கிறார். சௌந்தர்ராஜன், டானியல், வேலு பிரபாகரன் ஆகியோரும் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் டானியல் கவனம் ஈர்க்கிறார்
அன்றைய நிலையில் கன்னடத்தில் மேக்கிங் மற்றும் சிவராஜ்குமார் புகழ் ஆகியவற்றால் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம். ஆனால் இன்றைய சூழலில் தமிழுக்கு செட்டாகவில்லை. அல்லது செட்டாகும்படி மாற்றப்படவில்லை என்றே சொல்லலாம். முத்தையாவின் பஞ்ச் டயலாக்குகளும் பெரிய அளவில் விறுவிறுப்பை கூட்ட தவறிவிட்டது.
போலீஸ், ரவுடிசம், கொலை, என்கவுண்டர் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்தி. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.