ஜோ ; விமர்சனம்


சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரியோ ராஜ் ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள இந்த ‘ஜோ’ திரைப்படம் அவருக்கு கை கொடுத்திருக்கிறதா..? பார்க்கலாம்.

ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கியிருக்கிறார்.

நாயகன் ரியோ ராஜ் கல்லூரியில் சகமாணவி மாளவிகாமனோஜை காதலிக்கிறார்.அவரும் சம்மதிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு. அதனால் ஏற்படும் சோகத்தை தாங்கமுடியாமல் சீரழியும் ரியோ ராஜைப் பாதுகாக்க அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

மனைவியாகும் பவ்யா ட்ரிக்காவால் மேலும் துன்புறும் ரியோ ராஜ், அதன்பின் மனைவியின் சிக்கலை உணர்ந்து அதைத் தீர்க்க முயல்கிறார். அது என்ன சிக்கல்? அதை எப்படி எதிர்கொண்டார்? என்பதுதான் படம்

துடிப்பான கல்லூரி மாணவர்,காதல் தோல்வி தாடியுடன் சோகமாகத் திரியும் பாவப்பட்ட இளைஞர், சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனாளி ஆகிய மாறுபட்ட உணர்வுகளைத் தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெற்றிருக்கிறார் ரியோராஜ்.இப்படம் அவருக்குப் பல வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது.

காதலியாக நடித்திருக்கும் மாளவிகாமனோஜ் அழகான புதுவரவு. துள்ளல் நடிப்பில் கவர்ந்து பின்பு கலங்கவும் வைத்துவிடுகிறார்.

மனைவியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிக்காவுக்கு ஆழமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடம். அதற்கேற்ப நடித்திருக்கிறார். அவருடைய கண்கள் அவருக்குப் பெரும்பலம். சிலகாட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் சார்லி. அன்புதாசன், ஏகன்,இளங்கோ குமணன் ஆகியோரும் நன்று.

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் ராகுல் கே ஜி விக்னேஷ். வெளிப்புறக் காட்சிகள் மற்றும் உட்புற காட்சிகள் இரண்டையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். சித்து குமாரின் இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கின்றன.

எத்தனையோ காதல் கதைகளை பார்த்து சலித்து விட்ட ரசிகர்களுக்கு, இளமை ததும்பும் காதல் கதையான ஜோ நிச்சயமாக புதிய அனுபவத்தைத் தரும். சிற்சில குறைகள் இருப்பினும் ஒன்றுக்கு இரண்டு காதல்களைச் சொல்லி இளைஞர்களுக்குப் புதிய வழியைக் காட்டியிருக்கும் இயக்குநர் ஹரிஹரன் ராம் பாராட்டுக்குரியவர்.