சயன்ஸ் பிக்சன் படங்கள் சமீப காலமாகத்தான் தமிழில் வர தொடங்கியுள்ளன.. அதேசமயம் இன்று நேற்று நாளை படம் மூலம் அந்த ருசியை பல வருடங்களுக்கு முன்பே காட்டிய இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க அயலான் என்கிற சயன்ஸ் பிக்சன் படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அதன்மீதான எதிர்பார்ப்பு உடனே துவங்கியது. ஆனால் என்ன காரணமோ கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இதோ இப்போது திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களின் இந்த காத்திருப்புக்கு மரியாதை செய்திருக்கிறதா அயலான் ? பார்க்கலாம்.
விண்ணில் இருந்து விழும் எரிகல்லின் சிறு பகுதி ஒன்று பூமியில் விழுகிறது. அந்த எரிகல்லை வைத்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் அது மிகவும் சக்தி வாய்ந்தது என தெரிய வருகிறது. அந்த கல் மூலமாக பூமியை இதுவரை யாரும் தோண்டாத ஆழத்தில் தோண்டி பூமிக்கு அடியில் உள்ள மிக கொடிய விஷ வாயுவை எடுத்து அதை ஆயுதமாக தயாரிக்கும் முயற்சியில் வில்லன் ஈடுபடுகிறார். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டு மொத்த பூமியே அழிந்துவிடும் என்பதை அறிந்துக்கொள்ளும் வேற்றுகிரகவாசிகள் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.
அதற்காக வில்லனிடம் இருக்கும் அந்த எரி கல்லை கைப்பற்ற வேற்று கிரகவாசி ஒருவர் பூமிக்கு வருகிறார். சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எரிகல்லை எடுக்க வரும் வேற்றுகிரகவாசி, சிவகார்த்திகேயனுடன் நட்பாவதோடு, தனது முயற்சியில் அவரையும் சேர்த்துகொள்ள, இருவரும் சேர்ந்து பூமியை அழிவில் இருந்து மீட்டார்களா?, இல்லையா?, வேற்றுகிரவாசிகள் பூமியை காப்பாற்ற நினைப்பது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மட்டுமல்லாமல் ஆக்ஷனிலும் கலக்கியிருக்கிறார். ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். சில காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்
சிவகார்த்திகேயன் காமெடி மட்டும் இல்லாமல் யோகி பாபு, கருணாகரன் காமெடி, கவுண்டர் எல்லாம் சூப்பர். இவர்களுடன் ஏலியன் சேர்ந்து செய்யும் லூட்டி அளவே இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கிறது
வில்லனாக நடித்திருக்கும் சரத் கேல்கர் மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் நடிகை இஷா கோபிகர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். வேற்று கிரகவாசிக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் சித்தார்த் மற்றும் வேற்றுகிரகவாசியாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவனின் பணி சிறப்பு
கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வெட்டுகிளிகள் வரும் காட்சிகள், ஏலியன் வரும் காட்சிகள் என படம் முழுவதும் கிராபிக்ஸால் மிரட்டியுள்ளார்.இசைஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணியில் இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.ஒளிப்பதிவுநீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.
ஏலியன் என்றாலே கெட்டவர்கள், பூமிக்கு அழிவு என்பதை பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். ஆனால், ஏலியனால் உலகம் காப்பாற்றப்படுகிறது என்பதை இயக்குனர் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார். இது புது முயற்சி என்று சொல்லலாம். குழந்தைகள் கொண்டாடும் விதமாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் யானையில் இருந்து எறும்பு வரை என அனைத்தும் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இந்த படத்தை இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். புழு பூச்சி முதற்கொண்டு இந்த பூமி அனைவருக்கும் பொதுவானது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் ரவிகுமார்.