கேப்டன் மில்லர் ; விமர்சனம்


ராக்கி, சாணிக்காயிதம் என சில படங்களையே இயக்கி இருந்தாலும் வித்தியாசமான மேக்கிங்கிற்காக பிரபலமான இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனுஷுடன் கைகோர்த்து ‘கேப்டன் மில்லர்’ படத்தை செதுக்கு செதுக்கென்று செதுக்கி வந்தார். இதோ படமும் திரைக்கு வந்துவிட்டது. தன்னை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் திருப்தி தந்தாரா ?

ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தை சேர்ந்த நாயகன் தனுஷ், ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக ராஜாக்களும், இவர்களுக்கு அடிமையாக மக்களும் இருப்பதை விரும்பாமல், பட்டாளத்தில் சேர்கிறார். சிப்பாயாக இருக்கும் தனுஷ், சுதந்திர போராட்டகாரர்களை ஆங்கிலேயர்களின் கட்டாயத்தின் பெயரில் சுடுகிறார். பின்னர் மனவேதனை பட்டு சுட சொன்னவரை கொலை செய்துவிட்டு கொள்ளை கூட்டத்தில் சேர்கிறார் தனுஷ்.இவரை பிடிக்க ஆங்கிலேயர்கள் தேடுகிறார்கள்.

இந்நிலையில், ஊர் கோயிலில் பழைமையான பொக்கிஷத்தை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றுவிடுகிறார்கள். இதை அவர்களிடம் இருந்து திருட, ராஜா ஜெயபிரகாஷ் தனுஷை நாடுகிறார்.பொக்கிஷத்தை திருடிய தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் ஊரை விட்டு ஓடுகிறார். இதனால் கோபமடையும் ஆங்கிலேயர்கள் ஊர் மக்களை சித்ரவதை செய்து கொல்கிறார்கள்.இறுதியில் ஊர் மக்களை தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கம்போல தனுஷ் நடிப்பு அரக்கனாக மாறி மிரட்டி இருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் காட்டும் வெறித்தனத்தை பார்க்கும் போது இப்படியும் கூட நடிப்பை காதலிக்க முடியுமா? என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு திறமை புல்லரிக்க வைத்திருக்கிறது தனுஷ் என்ட்ரி, இன்டர்வெல் பிளாக் என நிறைய அசர வைக்கும் காட்சிகள் உள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் பிரமிப்பூட்டுகிறது

தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். கிளைமாக்ஸில் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் என பலரும் திறமையான நடிப்பால் நடத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் பிரியங்கா அருள் மோகன் டாக்டராகவும், பிற்பாதியில் தனுஷுக்கு உதவுபவராகவும் நடித்து மனதில் பதிகிறார். நிவேதிதா சதீஷ் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். குமரவேல் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் ஜிவி பிரகாஷின் இசை. படம் முழுக்க வித்தியாசமான பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். பீரியட் படங்களுக்கேற்ப காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா.

சமூகத்தில் இருக்கும் தீண்டாமை, பெண் அடிமைத்தனம், சுயநலத்திற்காக பயன்படுத்தப்படும் மக்கள், சமூக நீதிக்காக போராட செல்பவர்கள் உடைய நிலை, மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் போன்ற பல விஷயங்களை இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார். ஒருவருடைய நம்பிக்கை மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதையும் இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு ஆக்சன் கட்சிகளும் வெறித்தனமாக காட்டப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஹாலிவுட் ரேஞ்சில் சம்பவம் செய்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.