கொரோனா காலகட்டம் மக்களுக்குச் சேவை செய்பவர்களை கதாநாயகன் ஆக்கியது.இப்படி மக்களிடம் மருத்துவ சேவை செய்து கதாநாயகன் போல் பிரபலமானவர் தான் டாக்டர் வீரபாபு .அவர்தான் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
அனாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ்வளிக்கும் தொண்டு நிறுவனத்தை நடத்தி கிராமத்தில் சேவை செய்து வருகிறார் கிராமத்தில் மூலிகை வியாபாரம் செய்யும் டாக்டர் வீரபாபு.தனக்கு திருமணம் செய்ய நிச்சயித்த பெண் மஹானாவுடன் திருமணத்திற்கு துணி நகைகள் வாங்க சென்னை செல்கிறார்.
அங்கே மஹானாவின் அக்கா குழந்தை தொலைந்து போக வீரபாபு குற்றவாளிகளைத் தேடி ஓடுகிறார். அதை விசாரிக்கும் போது குழந்தை கடத்தலின் மிகப்பெரிய விஷயம் வெளிவர அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் கதாநாயகன் களம் இறங்க இறுதியில் வெற்றி கதாநாயகன்க்கு இதுவே முடக்கறுத்தான் படத்தின் கதைச்சுருக்கம்.
முடக்கறுத்தான் மூலிகை முடக்குவாதத்தை நீக்கக்கூடியது. அதுபோல் சமுதாயத்தில் குழந்தைகளைக் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் கொடூரமான மனநோய் கொண்ட மனிதர்களை ஒரு மூலிகையைப் போல் வேரறுக்கும் கதாநாயகனின் கதைதான் இது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் வீரபாபு, தனக்கு எது வருமோ அதை வைத்து தனது கதாபாத்திரத்தை குழப்பம் இல்லாமல் தெளிவாக வடிவமைத்திருப்பதால் எளிதாக, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதவாறு திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக, அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மஹானா ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைக்காட்டுகிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், இந்த வயதில் ஒரு ஸ்டண்ட் கலைஞரைப் போல் டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்திருப்பது வியக்க வைக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் வீரபாபுவே இப்படத்தை சமூக அக்கறையுடன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆனால் நோக்கத்தை மட்டும் நம்பி படத்தை எடுத்திருக்கும் அவர், சினிமாவில் அதன் தொழில் நுட்பத்தை அறியாமல் தெரிந்து கொள்ளாமல் இந்தப் படத்தை உருவாக்கி இருப்பது ஒரு சாதாரண படமாக தோன்ற வைக்கிறது. சினிமா தொழில்நுட்பத்தை சரியாக கையாண்டிருந்தால் இந்த ‘முடக்கறுத்தான்’ ஒரு விழிப்புணர்வு ஊட்டும் படமாக மாறி இருக்கும்.
ஆனாலும் சமூக அக்கறையுடன் இந்தப்படத்தை கொடுத்த ரியல் ஹீரோ வீரபாப்வுக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.